சாளக்ராமம் என்பது பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நத்தை போன்ற ஒரு உயிரினத்தின் ஓடாகும். இது நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றில்தான் உருவாகிறது. இதை பெருமாளின் திருவுருவமாக பாவித்து மகாவிஷ்ணு பக்தர்கள் தங்கள் வீட்டில் வைத்து தினமும் பூஜிக்கிறார்கள்.
சிவபெருமானை சைவர்கள் எப்படி லிங்க வடிவமாக பூஜிக்கிறார்களோ, அதேபோல பெருமாளை வைணவர்கள் சாளக்ராம வடிவத்தில் வைத்து பூஜிக்கிறார்கள். இந்தக் கற்களில் இயற்கையாகவே சங்கு, சக்கரம், தாமரை போன்ற உருவ அமைப்புகள் காணப்படுவதால் இது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
மகாவிஷ்ணு, ‘வஜ்ர கிரீடம்’ என்னும் புழுவாக மாறி சாளக்ராமத்தை குடைந்து அதன் மையப்பகுதிக்கு சென்று ஓம்கார ஒலி எழுப்பிக்கொண்டே பல அடையாளங்களை உருவாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
மரண காலத்தில் ஒருவன் சாளக்ராமத்தை மனதால் நினைத்து பூஜித்தாலே மோட்சம் அடைவான் என்று கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாளக்ராமத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜிப்பதால் செல்வ செழிப்பு குறைவில்லாமல் கிடைக்கும், மனநிம்மதியும் தெளிவும் பிறக்கும். சாளக்ராமம் இருக்கும் இடத்தில் தீவினைகள் எல்லாம் அகன்று போகும். சாளக்ராமத்தை பூஜை செய்து அந்த தீர்த்தத்தை அருந்துவோருக்கு முக்தி கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
சாளக்ராம வகைகள்: மச்ச சாளக்ராமம், கூர்ம சாளக்ராமம், வராக சாளக்ராமம், நரசிம்ம சாளக்ராமம், வாமன சாளக்ராமம், ராம சாளக்ராமம், கிருஷ்ண சாளக்ராமம் என்று சாளக்ராமங்களில் பல வகைகள் உண்டு. இவை நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றன.
சாளக்ராமங்களில் தற்போது நிறைய போலிகள் விற்பனைக்கு வந்து விட்டன. நிஜ சாளக்ராமத்தில் சீரற்ற வடிவமைப்புகளை காணலாம். ஒருவேளை சரியான வடிவத்தில் வெட்டப்படிருந்தால் அது உற்பத்தி செய்யப்பட்ட சாளக்ராமமாக இருக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சாளக்ராமத்தில் 68 வகைகள் உள்ளன என்றும் இதை வழிபட்டால் எம பயம் நீங்கி, சொர்க்கத்தை அடைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சாளக்ராமத்தை குளித்துவிட்டு மிகவும் சுத்தமாகத்தான் வழிபட வேண்டும். ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, இனிப்பு, துளசி வைத்து வழிபடலாம். சாளக்ராமத்தை வீட்டில் வைத்து பயபக்தியுடன் பூஜித்து வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.