முன்னும் பின்னும் முகம் உள்ள பசு தெரியுமா?

Agaligai marriage
அகலிகை திருமணம்https://134804.activeboard.com/

ந்தார மலையை மத்தாகவும், வாசுகியை  நாணாகவும் வைத்து பாற்கடலை தேவர்களும், அசுரர்களும்  கடைந்தபொழுது, அதிலிருந்து பல அபூர்வ சக்தி கொண்ட பொருட்கள் வெளிவந்தன என்பதை எல்லோரும் அறிவோம். முதலில் ஆலகால விஷம் (இதை சிவபெருமான் பருகினார் என்பது தனி கதை),  ஸ்ரீ லக்ஷ்மி, அமுத கலசத்துடன் ஸ்ரீ தன்வந்திரி, காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம் என்னும் வெள்ளை யானை,  உச்சைஸ்ரவம் என்னும் வெள்ளை குதிரை, அப்சரஸ்கள், அகலிகை என்னும் பேரழகு வாய்ந்த பதுமை ஆகியோர் கிடைக்கப் பெற்றார்கள்.

பேரழகு ஸ்வரூபியாக இருந்த அகலிகையைப் பார்த்தவுடன், அனைவருக்குமே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த இந்திரனும், கௌதம முனிவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் இருவருக்குமே அகலிகையை அடைய வேண்டும் என்கிற ஆசை வந்தது. முனிவராய் இருப்பவர் எதற்காக ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்பட வேண்டும்? ‘அகலிகையை நான்தான் அடைவேன்’ என்று முழக்கம் செய்தான் இந்திரன். ‘முனிவராய் இருந்தால் என்ன? ஆசை என்பது எல்லோருக்கும் இருக்கும் மனித சுபாவம்தானே. எனக்குத்தான் அகலிகை வேண்டும்’ என்று பதில் கொடுத்தார் கௌதம முனிவர்.

இந்த வழக்கு பிரம்மாவிடம் சென்றது.

"உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அந்தப் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே அகலிகை"  என்றார் பிரம்மதேவன்.

"சரி சரி, அது என்ன போட்டி?" என்று இருவரும் ஆவலுடன் கேட்டார்கள்.

"ஒரு பசுவிற்கு ஒரு தலைதானே இருக்க முடியும்? ஆனால், முன்பக்கம் பின்பக்கம் ஆக இரண்டு பக்கமும் தலை உள்ள பசுவைக் கண்டு, அதை மூன்று முறை வலம் வந்து,  நமஸ்கரித்து வருபவர்களுக்குத்தான் அகலிகை. ஆனால் நீங்கள் செய்ததற்கு எனக்கு ஆதாரம் வேண்டும்" என்றார் பிரும்மா.

அந்தப் போட்டிக்கு உண்டான சவாலை ஏற்றுக்கொண்டு இருவரும் தத்தம் வழியே சென்று, அவ்வாறு உள்ள ஒரு பசுவைத் தேடி அலைய ஆரம்பித்தார்கள். எங்கு தேடியும் அம்மாதிரியான பசு இருவருக்கும் கிடைக்கவே இல்லை. இந்திரன் மனம் தளராமல் தேடுவதைத் தொடர்ந்தான். ஆனால், முனிவருக்கு மனம், உடல் இரண்டுமே தளர்ந்து விட்டது. தனக்கு அகலிகை கிடைக்க மாட்டாள் என்று சோர்ந்து போய், தேடுவதை விட்டுவிட்டார். ஆனால், அவரின் மனம், ‘இந்திரன் அகலிகையை அடைந்து விடுவானோ’ என்கிற சஞ்சலத்தில் இருந்தது.

அப்பொழுது நாரதர் அவ்விடம் வந்தார். சோர்ந்து போய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டு என்ன விஷயம் என்று கேட்டார். நடந்த விபரங்களையும், பிரம்மதேவன் போட்டி அறிவித்ததையும் நாரதரிடம் விவரித்தார். அப்பொழுது நாரதர், "நீங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் மிகப்பெரிய கோசாலை ஒன்று உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கில் பசுக்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது இம்மாதிரி அமைந்திருக்கலாம் அல்லவா? அங்கு போய் பார்த்தீர்களா?" என்றார்.

பார்க்கவில்லை என்று கூறிய முனிவர், நாரதரை துணைக்கு அழைத்துக் கொண்டார். "நாம் இருவருமே அங்கு செல்வோம். அப்படி இரண்டு பக்கமும் தலை கொண்ட ஒரு பசு இருந்தால்,  எனக்கு அகலிகை கிடைப்பாள் அல்லவா?" என்று கூறிக்கொண்டே சென்றார்.

இதையும் படியுங்கள்:
மோனாலிசா ஓவியத்தின் இன்றைய மதிப்பை கேட்டால் அசந்துதான் போயிடுவீங்க!
Agaligai marriage

இருவரும் கோ சாலையை அடைந்தார்கள். ஆனால், அப்படி ஒரு பசு அந்தக் கூட்டத்தில் இல்லவே இல்லை. மீண்டும் மனமும் உடம்பும் தளர்ந்து போனார் முனிவர். அப்பொழுது நாரதர், "முனிவரே, அங்கு பாருங்கள், அங்கு பாருங்கள். இரு தலை கொண்ட பசு பாருங்கள்" என்றார். முனிவர் ஆவலுடன் பார்த்த திசையில், ஒரு  சினைப் பசுவானது, கன்றை ஈன்றுக் கொண்டிருந்தது. முன் பக்கமும் முகம். பின்பக்கமும் முகம் வெளிவந்து கொண்டிருந்தது. நாரதர், "பார்த்தீர்களா முனிவரே? இதுதான் முன்னும் பின்னும் முகம் அமைந்திருக்கும் பசு" என்றார். முனிவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவசர அவசரமாக அந்தப் பசுவை மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தார். " நாரதரே இதற்கு  நீயே சாட்சி" என்றார்.

இருவரும் பிரம்மாவிடம் சென்றார்கள். இரு பக்கமும் முகமுள்ள பசுவைக் கண்டு நமஸ்கரித்த விபரத்தை கௌதம முனிவர் கூறினார். சாட்சி யாது என்று பிரம்மா கேட்க நாரதர், பசுவானது கன்றை ஈன்ற பொழுது தானும் உடனிருந்து பார்த்ததைக் கூறினார். பிரம்மா தலைமையில், தேவர்கள், முனிவர்கள் புடை சூழ,  அகலிகைக்கும் கௌதம முனிவருக்கும் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் நடந்து முடிந்த விஷயம், தேடலில் இருந்த இந்திரன் காதுகளுக்கு எட்டியது.   ஒரு முனிவன் அகலிகையை அடைந்து விட்டானே என்கிற ஆத்திரத்தில் பின் ஒரு நாள் இந்திரன் அகலிகையை அடைய நினைத்து  முனிவரிடம்  இந்திரன்,  அகலிகை இருவருமே சாபம் பெற்றது தனி கதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com