'நம சிவாய' என்பதற்கும் 'சிவாய நம' என்பதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

ஸ்ரீ சிவபெருமான்
ஸ்ரீ சிவபெருமான்
Published on

பிஷேகப் பிரியரான சிவபெருமானின் நாமத்தை, 'சிவாய நம' என்று அழைப்பதா? அல்லது 'நம சிவாய' என்று அழைப்பதா என்ற குழப்பம் பலருக்கும் வருவதுண்டு. மாணிக்கவாசக சுவாமிகள் தனது திருவாசகத்தைத் துவங்கும்போது இந்தப் பஞ்சாட்சரத்தை வைத்துத்தான் துவங்குகிறார். ‘நம சிவாயம் வாழ்க… நாதன் தாள் வாழ்க… இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க‘ என்றார். பஞ்சாட்சரம் என்பது  ஸ்தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என்ற ஐந்து மந்திரங்களை உள்ளடக்கியுள்ளது.

ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது நம சிவய என்ற நாமம். சூட்சும பஞ்சாட்சரம் என்பது சிவய நம என்ற நாமம். அதிசூட்சும பஞ்சாட்சரம் என்பது சிவய சிவ என்பதாகும். காரண பஞ்சாட்சரம் என்பது சிவ சிவ என்பதாகும். மகா காரண பஞ்சாட்சரம் என்பது சி என்ற நாமம் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதில் வரக்கூடிய மந்திரங்கள் அனைத்துமே மாறி மாறி வந்தாலும் எல்லாமே 5 எழுத்துக்கள்தான். அவற்றின் சிறப்புகளைப் பார்ப்போம்.

‘சி’ என்றால் சிவம். ‘வ’ என்றால் திருவருள். ‘ய’ என்றால் ஆன்மா. ‘ந’ என்றால் திரோத மலம். ‘ம’ என்றால் ஆணவ மலம். ஸ்தூல பஞ்சாட்சரம் என்று சொல்லும் நம சிவாய என்ற மந்திரத்தை சொன்னால் நமக்கு  இகலோக பலன்கள் கிடைக்கும். இதனால் இப்பிறவிக்குக் கிடைக்கக் கூடியவற்றை நாம் பெற்று உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியும்.

அடுத்ததாக, சூட்சும பஞ்சாட்சரத்தை சிவாய நம என்று மனதிற்குள்ளேயே சொல்ல வேண்டும். சத்தமாக சொல்லக்கூடாது. அதனால்தான் 'சிவாய நம' என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இது இம்மை, மறுமைக்கு ஞான நலன்களுடன் மோட்சம் அடையும் தகுதியையும் பெற்றுத் தரும்.

அதிசூட்சும பஞ்சாட்சரத்தில், 'சிவய சிவ' என்ற நாமம். இதில் ய உயிராகக் கருதப்படுகிறது. சிவ இருபுறமும் இருக்கு. இதனால் சிவமாகவும், சக்தியாகவும் இருந்து நமது ஆன்மாவைக் காக்கக் கூடிய மந்திரம். நமது சிந்தை முழுவதையும் இறைவனின் திருவடியிலேயே அர்ப்பணித்து இறைவனை ஒன்றக்கூடிய நிலை உண்டாகும். நம் மல மாயங்களை நீக்கிப் பேரின்ப பெருவாழ்வைப் பெற்றுத் தரும். இதற்கு மாணிக்க மந்திரம் என்றும் பெயர்.

இதையும் படியுங்கள்:
தாவர பாலின் பல்வேறு நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்!
ஸ்ரீ சிவபெருமான்

காரண பஞ்சாட்சரத்தில் 'சிவ சிவ ''என்ற நாமம் வருகிறது. இதற்கு இறைவனும் நாமும் ஒன்று என்று பொருள். இறைவனின் திருவடியில் நிரந்தரமாகக் கலக்க இந்த நாமம் பயன்படும். அதனுடன் வாசனா மலங்களையும் இது நீக்கும். ஆணவம், கன்மம், மாயை என்பது மும்மலங்கள். நமது மலங்கள் நீங்கினாலும் பெருங்காய டப்பாவில் காயத்தை நீக்கினாலும் வரும் வாசனைப் போல மலங்கள் நீங்கினாலும் அவற்றின் எச்சம் ஒட்டிக்கொண்டே இருக்கும். அதையும் போக்கும் நாமம்தான் இது.

அடுத்ததாக, மகா காரண பஞ்சாட்சரம். இதற்கு ஓரெழுத்து மந்திரம் என்று பெயர். இந்த ஒரு எழுத்தான ‘சி’என்பதை மட்டும் சொன்னால் முன்னால் இருக்கும் நான்கு மந்திரங்களையும் சொன்ன பலன்களைத் தரக்கூடியது.

மேற்கூறிய மந்திரங்களை மனம் உருக, உள்ளம் உருக சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டு கூறினால் அதற்குண்டான பலன்களை எளிதாகப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com