அரக்கன் ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்ட சீதா பிராட்டியை இலங்கையின் அசோக வனத்தில் சந்தித்துத் திரும்பிய அனுமன், ஸ்ரீராமனிடம் ‘கண்டேன் சீதையை’ என்று சொல்ல, ராமபிரான் அளவில்லாத ஆனந்தமடைந்தார். “அனுமனே, நீ துன்பங்களை வென்று மீண்டு வந்துள்ளாய்” எனக் கூறி, அனுமனைக் கட்டித் தழுவினர் ராமபிரான். அந்த மகிழ்ச்சியான நேரத்தில் அனுமனின் உண்மையான சொரூபத்தைக் காண விரும்பிய ஸ்ரீராமர், தனது விருப்பத்தை அனுமனிடம் வெளியிட, அனுமன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தனது மனதில் எண்ணி மண்ணுக்கும் விண்ணுக்குமாக வளர்ந்துகொண்டே சென்றார்.
தம்பி லட்சுமணனுடன் அதைக் கண்ட ஸ்ரீராமர், “அனுமனே, போதும். உன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்தோம். இனி, உனது உடலை சுருக்கிக் கொண்டு பழைய உருவத்தை அடைவாயாக” என்று கூறினார். அதன் பின்பு பழைய உருவத்தை அடைந்த அனுமன், ஸ்ரீராமரிடம், “சுவாமி தங்களின் உண்மையான சொரூபத்தைக் கண்டு களிக்க எனக்கும் விருப்பமாக உள்ளது. அதைத் தாங்கள் நிறைவேற்றி எனக்கு அருள வேண்டும்” என்றார்.
ஸ்ரீராமர் அப்போதே மகிழ்ச்சியுடன் மகாவிஷ்ணுவாக உருவெடுத்து தன்னுடைய விசுவ ரூபத்தைத் தாங்கி நின்றார். ஆயிரம் கரங்களுடன் அண்ட சராசரங்களையும் கொண்ட சொரூபத்தைக் கண்ட அனுமன், அளவில்லா ஆனந்தப் பரவசமடைந்து அவருடைய பாதக் கமலங்களில் விழுந்து வணங்கி சரணடைந்தார்.
“இந்த நல்ல நேரத்தில் உனக்குக் கொடிய விளைவுகள் எந்தத் திக்கில் இருந்து வந்தாலும் அதை முன்னதாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப உருவங்களை மாற்றிக்கொள்ள எனது அவதாரத்தில் உள்ள ஐந்து முகங்களையும் அதற்குத் தேவையான சக்திகளையும் உனக்குத் தருகிறேன்” என்று கூறி ஆசீர்வதித்தார் ராமபிரான்.
தரையில் விழுந்து வணங்கி எழுந்த அனுமன், “சுவாமி, எனது பாக்கியமே பாக்கியம்” என்று சொல்லி கிழக்கு திசைக்கு அனுமன் முகமாகும், மேற்கு திசைக்கு கருடனாகவும், வடக்கு திசைக்கு வராகராகவும், தெற்கு திசைக்கு நரசிம்மர் முகமாகவும், மேல் நோக்கிய திசைக்கு ஹயக்ரீவராகவும் திருவுருவம் பெற்று பத்து கரங்களுடன் பஞ்சமுக அனுமனாக விஸ்வரூபக் கோலத்தில் காட்சி தந்தார்.
இப்படிப் பஞ்ச (ஐந்து) முகம் பெற்ற அனுமனை தரிசிப்பதும் பூஜிப்பதும் வாழ்வில் அனேகப் பலன்களை பெற்றுத் தரும்.