முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் அமைந்தது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் அவதியுற்ற தேவர்கள் பிரம்ம தேவனிடம் சென்று தங்களை சூரபத்மனிடமிருந்து காத்தருளுமாறு வேண்டிக் கொண்டனர். ஆனால் பிரம்ம தேவனோ, சூரபத்மனை சிவபெருமான் ஒருவராலேயே அழிக்க முடியும் என்று கூறினார். தேவர்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனைப் பற்றி எடுத்துரைத்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்டார்கள்.
சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகியவற்றை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக் கண்ணிலிருந்து பிரகாசமான ஜோதி ஒளி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் இட, அதை கங்கையாலும் தாங்க முடியாத காரணத்தினால் அக்னி பகவான் அதை எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்க ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் அவதரித்தார்.
முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். பார்வதி தேவி தனது சக்தி அனைத்தையும் திரட்டி ஒரு வேலாயுதத்தை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்தாள்.
சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் சூரபத்மனை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முருகப் பெருமான் வீரவாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால், சூரபத்மன் வீரவாகுவின் அறிவுரைகளை ஏற்கவில்லை. போர் தொடங்கியது. முருகப்பெருமானின் பூத சேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் சகோதரன் சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர். அதையடுத்து சூரபத்மனுடன் முருகப்பெருமான் நேரிடையாகப் போரிட்டார்.
மகாவல்லமை பெற்ற சூரபத்மன் பல வடிவங்களை எடுத்து முருகனை வெல்ல முயன்றான். ஆனால், சூரபத்மன் இறுதியாக எடுத்த வடிவமான மாமரத்தினை முருகப்பெருமான் வேல் கொண்டு இரண்டாகப் பிளந்ததோடு மட்டுமின்றி, அம்மரம் மீண்டும் பொருந்தாவாறு அதனை கீழ்மேலாக மாற்றி போட்டார்.
முருகனின் வலிமையையும் தந்திரத்தையும் உணர்ந்த சூரபத்மன் ‘முருகா, இதுநாள் வரை ஆணவத்தின் காரணமாக பல தவறுகளைச் செய்து விட்டேன். எனது ஆணவத்தை நீ எனது அகத்திலிருந்து பிரித்து விட்டாய். நான் கேட்கும் வரத்தினைத் தந்து எனை நீ காத்தருளுவாய்’ என்று வேண்டினான். மேலும் “எனது உடலாகிய இரு பிளவுகளில் ஒன்று உன்னை சுமக்கவும் மற்றொன்று உன் கொடியிலிருக்கவும் விரும்புகிறது” என்றான். அதை ஏற்ற முருகன், “உனது உடலின் இரு பிரிவில் ஒன்று என்னை சுமக்கட்டும். மற்றொன்று என் கொடியில் இருக்கட்டும்” என்று அருள்பாலித்து இரண்டாகப் பிளந்த மாமரத்தின் ஒரு பாதியை சேவலாகவும் மறுபாதியினை மயிலாகவும் மாற்றினார். அவற்றை தனது கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டார் முருகப்பெருமான்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். மயில் மிகவும் சாதுவான ஒரு பறவை. முருகனை வழிபடுவோரின் மனத்தில் அசுர குணங்கள் ஏதேனும் இருந்தால் அது விலகி மனமானது சாந்தமடைந்து வழிபடுவோர்க்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்பதே ஐதீகம்.