Narayana Bhattathiri Sri Guruvayurappan
Narayana Bhattathiri Sri Guruvayurappan

நாராயணீயம் காவியம் தோன்றிய வரலாறு தெரியுமா?

Published on

கேரள மாநிலம், குருவாயூர் தலத்தைப் பற்றி நினைக்கும்போதே கூடவே நினைவில் எழுபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேலப்பத்தூர் நாராயண பட்டத்திரி என்பவராவார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் இவர். நாராயண பட்டத்திரி நம்பூதிரி என்னும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர். வேதம் கற்றுத் தரும் பெருமைமிக்க குலம் அது.

ஒரு சமயம் நாராயண பட்டத்திரியை கடும் நோய் ஒன்று பற்றியது. அவரைப் பற்றிய நோய் நீங்க வேண்டுமானால் அவர் ஸ்ரீ கிருஷ்ணன் குறித்துப் பாட வேண்டும் என்று அவருக்குப் பலர் அறிவுரை கூறினர். அதை ஏற்று பட்டத்திரி குருவாயூருக்கு வந்தார். ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி பாடுவதற்கு முன்பு மகாகவியான துஞ்சத்து எழுத்தச்சனை சந்தித்து அவரது அறிவுரையைப் பெற வேண்டும் என நாராயண பட்டத்திரிக்கு பலர் யோசனை கூறினர். ஆனால், எழுத்தச்சன் தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவர் என்றாலும் கலைமகள் சரஸ்வதியே குடியிருக்கும் அவரைத் தேடிச் சென்றார் நாராயண பட்டத்திரி. அந்த சேரிக்குள் சென்று எழுத்தச்சனை பற்றி விசாரித்தார். எழுத்தச்சன் கள்ளுக் கடையில் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார் நாராயண பட்டத்திரி. அங்கே மீனைக் கடித்து உண்டவாறே கள்ளை அருந்திக் கொண்டிருந்தார் எழுத்தச்சன்.

நாராயண பட்டத்திரியைப் பார்த்ததும், “என்ன வேண்டும்?” என்று கேட்டார் எழுத்தச்சன். அதற்கு “ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பாட வேண்டும். எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்று கூறினார் பட்டத்திரி. எழுத்தச்சன் தலையை ஆட்டியவாறு பளிச்சென்று, “மச்சத்தை (மீனை) தொட்டு உண்” என்றார்.

இதையும் படியுங்கள்:
மனைவியிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் எவை தெரியுமா?
Narayana Bhattathiri Sri Guruvayurappan

சுற்றி இருந்தவர்கள் திகைத்தார்கள். ‘பட்டத்திரி பெரிய ஞானி. அவரிடம் மீனை சாப்பிடச் சொல்கிறாரே எழுத்தச்சன்’ என்று. ஆனால், பட்டத்திரி புரிந்து கொண்டார். உடனே அவர்தம் கண்கள் பரவசப் பெருக்கால் பொங்க, எழுத்தச்சனை வணங்கி, “புரிகிறது ஆசானே, தங்கள் அறிவுரைப்படி எம்பெருமானின் மச்சாவதாரத்தில் தொடங்கிப் பாடுகிறேன்” என்று கூறி தமது ஒப்பற்ற பக்திக் காவியத்தை பாகவதத்தின் சாரமாக சமஸ்கிருதத்தில் பாடினர். அந்தக் கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம்.’ பட்டத்திரி குருவாயூரப்பன் சன்னிதியில் ஒவ்வொரு லீலையை பாடி விட்டு, “கிருஷ்ணா, நான் சொல்வது சரிதானே. நீ கோவர்த்தன கிரியை குடையாய் பிடித்தாய் அல்லவா? கோபியருடன் விளையாடினாய் அல்லவா?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பார். அவற்றுக்கெல்லாம் ஸ்ரீகிருஷ்ணன் தலையாட்டினால்தான் அவர் அடுத்த பகுதியைப் பற்றிப் பாட முனைவாராம்.

அந்த ஸ்ரீ கிருஷ்ணனையே தனது முதல் வாசகனாகி கேட்க வைத்து நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரியின் நோய் பூரணமாக குணமாகியது. இப்படித்தான் நாராயணீயம் காவியம் உருவானது.

logo
Kalki Online
kalkionline.com