வல்லபை கணபதி வரலாறு தெரியுமா உங்களுக்கு!

வல்லபை கணபதி வரலாறு தெரியுமா உங்களுக்கு!

ச்சிமூதூர் எனப்படும் காஞ்சிபுரத்தில் கணபதி புரிந்த லீலைகள் அனேகம். ஒரு காலத்தில் இரண்யபுரத்தை ஆட்சி செய்து வந்தான் கேசி என்னும் அரக்கன். அவனது முன்ஜன்ம வினையின் காரணமாக, கணபதியின் சக்தியான வல்லபை அவனுக்கு மகளாகப் பிறந்தாள். வல்லபை வளரும் பருவத்திலேயே சிறந்த சிவ பக்தையாக விளங்கினாள். இதனால் கோபம் கொண்ட அரக்கன் கேசி, வல்லபையை சிவ பூஜை செய்ய முடியாதபடி சிறைபூட்டி ஒளித்தான். இதனால் மனம் வாடினாள் மகேசனின் மருமகள்.

இதனை அறிந்த ஆனைமுகர், கச்சிப் பதியிலே ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்து, அப்பன் ஈசனை மனங்குளிர பூஜித்து வழிபட்டார். கேசியை அழிக்கும் ஆற்றலையும், வல்லபையை மணக்கும் வல்லமையையும் கயிலைநாதரிடம் பெற்ற கணேசர், தனது வாகனமான மூஞ்சூர் மீதேறிச் சென்று, கேசியிடம் போரிட்டு அழித்து வல்லபையை மணந்தார். அதுமுதல் கணபதி, ‘ஸ்ரீ வல்லபை கணபதி’ என்று போற்றப்பட்டார்.

‘அனேகபம்’ என்றால் யானை என்று பொருள். யானைமுகத்தோன் இங்கே சிவபெருமானை பூஜித்தக் காரணத்தால் இத்தலம், ‘அனேகதங்காபதம்’ என்று ஆனது. வடநாட்டில் ஓர் அனேகதங்காபதம் இருப்பதனால் காஞ்சிபுரத்தின் ஓர் பகுதியாக விளங்கும் இத்திருத்தலம், ‘கச்சி அனேகதங்காபதம்’ என்று வழங்கலானது. பிள்ளையார் வழிபட்ட காரணத்தால் தற்போது இப்பகுதி, ‘பிள்ளையார்பாளையம்’ என்றே அழைக்கப்படுகின்றது.

இத்தல பெருமானை தனாதிபதியான குபேரனும் வழிபட்டு வரம் பெற்றுள்ளான் என்பது சிறப்பு. காஞ்சி புராணத்தில்  இத்தல நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து தேவாரத் திருத்தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காஞ்சியில் தங்கி, இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். காஞ்சி மாநகரின் பிள்ளையார்பாளையத்தில் கயிலாசநாதர் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ அனேகதங்காபதேஸ்வரர் ஆலயம்.

பல்லவர் கால திருக்கோயில் இது. இரண்டாம் குலோத்துங்கன் திருப்பணி செய்துள்ளார். அலைமோதும் கூட்டம், ஆரவாரம் இல்லை. அமைதியான ஆலயம். தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகின்றது. சிவராத்திரி, அன்னாபிஷேகம் மட்டுமே வருடாந்திர விசேஷ நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. பிரதோஷ தினங்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஈசனிடம் கணபதி வைத்த வேண்டுகோளின்படி இங்கு வழிபடுவோரது திருமணத் தடைகள் அகலும். நெடுநாட்கள் மணம் புரிய மறுக்கும் நபர்கள் இக்கோயில் ஈசனையும் கணபதியை வழிபட, தாங்களே மனமுவந்து, திருமண நாட்டத்தை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com