கிருஷ்ணார்ப்பணம் என்பதின் அர்த்தம் தெரியுமா?

Sri Krishnar
Sri Krishnar
Published on

ரு சிறிய கிராமத்தின் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோயில். அங்கு அர்ச்சகரும் அவரிடம் வேலை பார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை நாலு மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவார்கள். துளசி ராமனுக்கு கோயில் தோட்டத்து பூக்களை எல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்துத் தர வேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசி ராமனுக்கு அந்த பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணரின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதில் சொல்லியபடி பூக்களை பறித்து தொடுப்பான். பத்து பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன் ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.

அர்ச்சகர் கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப்போனால் ஏற்கெனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்றிருக்கும். அதைப் பார்த்து அர்ச்சகருக்கு இது துளசி ராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனை கூப்பிட்டு, ‘துளசிராமா இதெல்லாம் அதிக பிரசங்கித்தனம். நீ மாலை கட்ட வேண்டுமே தவிர, சூட்டக்கூடாது’ என்று கண்டித்தார்.

“ஸ்வாமி நான் சூட்டவில்லை. கட்டிய மாலைகள் மொத்தம் பதினைந்து. அத்தனையும் உங்களிடம் கொடுத்துவிட்டேன்’’ என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவே இல்லை.

‘‘நாளையில் இருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியை செய்! பூ கட்ட வேண்டாம்” என்றார் அர்ச்சகர். இதுவும் இறைவன் செயல் என்று துளசிராமன் நீர் இறைக்கும்போதும் தொட்டிகளில் ஊற்றும் போதும் கிருஷ்ணார்ப்பணம்  என்று மனம் நிறைய சொல்லிக் கொள்வான் மனமும் நிறைந்தது.

இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும் முன்பே அபிஷேகம் நடந்து முடிந்து கருவறை ஈரமாகி இருக்கும். நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும். அர்ச்சகருக்கு கடும் கோபம். “துளசிராமா, நீ அபிஷேகம் செய்யும் அளவுக்கு துணிந்து விட்டாயா? உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே” என திட்ட ஆரம்பிக்க, துளசி ராமன் கண்களின் கண்ணீர். “சுவாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன். உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகமானது என்று எனக்கு தெரியாது” என்றான். அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே அவனை மடைப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரசாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும் காய் நறுக்கும்போதும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கு காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக சன்னிதானத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.

மறுநாள் அதிகாலையில் சன்னிதி கதவை திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரை பொங்கல் நெய் வைத்தியம். மடைப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி நெய் விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. ‘அதற்குள் எப்படி இங்கு வந்தது? நானும் கதவை பூட்டிவிட்டுத்தானே சென்றேன். பூனை, எலி ஏதாவது கொண்டு வந்திருக்குமோ’ துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்த பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்து விடுகிறது அவன் என்ன மந்திரவாதியா என்று குழம்பினார் அர்ச்சகர்.

இன்று அவர் துளசிராமனை கண்டிக்கவில்லை. “நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பை பாதுகாக்கும் வேலையை செய். நீ அதற்குதான் சரியானவன்” என்று கூறினர். ‘பூ, நீர், பிரசாதம் எல்லாம் நல்ல பொருட்கள் சன்னிதிக்கு வந்துவிட்டன. இனி என்னாகிறது என்று பார்ப்போம்’ இதுதான் அர்ச்சகரின் எண்ணம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை சிதைக்கும் மனச்சோர்வு!
Sri Krishnar

இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக்கொண்ட துளசிராமன் அன்று முதல் வாசலில் நின்றிருந்தான். அதே கிருஷ்ணார்ப்பணம் என்றே அந்த வேலையையும் செய்து கொண்டிருந்தான்.

இன்று அர்ச்சகர் சன்னிதியை பூட்டி சாவியை தன்னுடன் கொண்டு சென்றார். மறுநாள் காலை சன்னிதிக் கதவு திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவருக்கு நடுங்க தொடங்கியது. ‘இது என்ன கிருஷ்ணா, உனது பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு. பாத கமலங்களின் பாதுகையின் பீடத்தின் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது. துளசிராமன் எப்படிப்பட்டவன். அவனுக்கு சன்னிதி பூட்டை திறந்து இப்படி செருப்பை வைக்க எப்படி மனம் வரும்?’

ஆச்சரியம், அச்சத்தால் அர்ச்சகருக்கு வேர்த்து கொட்டியது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல். ‘அர்ச்சகரே பயப்பட வேண்டாம். அந்த துளசி ராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அவன் கிருஷ்ணார்பணம் என்று எனக்கு காணிக்கையாக்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க, செய்யும் பூஜையை விட எதைச் செய்தாலும் எனக்கு காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக் கொண்டேன். துளசிராமன் ஒரு யோகி. அவன் அன்பு எனக்கு பிரியமானது’ என்றது அந்தக் குரல். கிருஷ்ண பகவானின் இந்த குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடி வந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்.

ஆம், நாம் எந்த வேலை செய்தாலும் அதை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் நிச்சயம் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com