ஒரு சமயம் விசுவாமித்திரர் அசுரர் தொல்லையிலிருந்து தமது யாகத்தைக் காக்க ராம, லக்ஷ்மணர்களை தம்மோடு அழைத்து வந்தார். ஒரு நாள் அவர்கள் கங்கைக் கரையில் தங்களை மறந்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள். காடு, மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப் பற்றி கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்துக்கொண்டு வந்த விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அதிகாலை நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர் ஆறரை மணி வரை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை. உடனே, ‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்று சொல்லிக்கொண்டே எழுப்பினாராம்.
இன்று ஒரு நாள் இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால், தினமும் ராமனை காலையில் எழுப்பும் பேறு பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள். அதனால்தான் அவளைத் தொழுதவாறு ஸ்ரீராமனை இப்படி எழுப்புகிறார்.
சரி, இதற்கு என்ன பொருள் என்றால், ‘கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறை கடமை!’ என்பதாகும்.
இந்த, ‘கௌசல்யா சுப்ரஜா’ என்ற வால்மீகியின் வார்த்தையினைக் கொண்டு, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் என்பவரே இதை எழுதினார். அவர் எழுதிய அந்தப் பாடல்களே இன்றும் திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய குரலில் திருப்பள்ளியெழுச்சியாக ஒலிக்கிறது.
‘எல்லாம் சரி, ராமனை எழுப்பி ஆகிவிட்டது. லட்சுமணனை ஏன் எழுப்பவில்லை’ என்ற கேள்வி பலருக்கும் எழும். லட்சுமணன் ஆதிசேஷனின் அம்சம். மகாவிஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் எழுப்ப மாட்டார்கள். எழுப்பவும் முடியாது. அதனால்தான் லட்சுமணனை இதில் சேர்க்கவில்லை.
பகவான் ஸ்ரீ ராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா’ என ஏன் சொல்லிக்கொண்டே எழுப்ப வேண்டும்? என்ன அர்த்தம் இதற்கு என்றால், ‘இப்பேர்ப்பட்ட மகிமைமிக்க ராமபிரானை பெற்றெடுத்த கௌசல்யையே நீ என்ன விரதம் மேற்கொண்டு இந்த வரத்தை பெற்றாயோ’ என்று ஸ்ரீ ராமபிரானின் புகழை மறைமுகமாக சொல்லிவிட்டு அவனுடைய தாயாரை வாயால் மனதாரப் புகழ்கிறார் விசுவாமித்திரர்.