ஆங்கிலேயரை அலற விட்ட பூலித்தேவர் மாயமான கோயில் தெரியுமா?

ஆங்கிலேயரை அலற விட்ட பூலித்தேவர் மாயமான கோயில் தெரியுமா?
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து, திருநெல்வேலி செல்லும் வழியில் 43 கி.மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோயில். சங்கரநயினார் கோயிலில் நிலைகொண்டிருக்கும் கடவுளர்கள் சங்கரலிங்கனார், கோமதி அம்மன், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றிணைந்த சங்கரநாராயணர். 108 சக்தித் தலங்களில் ஒன்றான இந்தக் கோயில், பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கோமதி அம்மன் சன்னிதியில் சுவாமிக்கு முன்பு, ‘ஆக்ஞாசக்ரம்’ பதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சக்கரத்தில் அமர்ந்து அம்மனிடம் வேண்டினால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பரவலான நம்பிக்கை. பக்தர்களை நோயிலிருந்து மீட்டெடுத்து, அம்மன் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகப் பலனடைந்தவர் கூறுவர். ஆக்ஞாசக்ரத்தில் அமர்ந்து அம்மனைத் தியானம் செய்யும் வசதி தற்போது இல்லை. அதைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் ஆக்ஞாசக்ரத்தைத் தொட்டு அம்மனை வேண்டிக்கொள்ளலாம். இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம். இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் தீராத உடல் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் பலரும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்த அம்பிகைக்கு ஸ்ரீ சங்கரநாராயண கோலம் இத்தலத்தில் காட்டப்பட்டதாகப் புராணம். இப்புராண சம்பவம் நடைபெற்ற ஆடி பௌர்ணமி நாளையே ஆடித் தவசு பிரம்மோத்ஸவம் என்று கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் கொடுத்த குறுநில மன்னர் பூலித்தேவருக்கு, ‘பூலித்தேவன் அறை’ ஒன்று கோமதி அம்மன் சன்னிதியில் உள்ளது. ‘இதுதான் பூலித்தேவர் காணாமல் போன இடம்’ என்ற அறிவிப்புப் பலகையும் அங்கு காணப்படுகிறது. 1726ம் ஆண்டு மணிமுடி சூட்டிக்கொண்ட பூலித்தேவர், பாளையக்காரர்களை ஒன்று திரட்டி 17 வருடங்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் புரிந்தார். சிறை பிடிக்கப்பட்டவுடன், சங்கரநயினார் கோயிலில் இறைவனை வழிபட அனுமதி பெற்று, உள்ளே சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையில் யார் கண்ணிலும் படாமல் மாயமாக மறைந்ததாகக் கூறப்படுகிறது.

தரிசன நேரம்: காலை 5.30 முதல் 12.15 மணி வரை. மாலை 5.30 முதல் 9 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com