பக்தர் குறை தீர்க்கும் பஞ்ச நரசிம்மர் க்ஷேத்ரங்கள் தெரியுமா?

திருக்குறையலூர் ஸ்ரீ உக்கிர நரசிம்மர்
திருக்குறையலூர் ஸ்ரீ உக்கிர நரசிம்மர்

பாலகன் பிரகலாதனின் நம்பிக்கையை மெய்ப்பிக்க தூணிலிருந்து வெளிப்பட்ட அவதாரமான நரசிம்மரின் பாதத்தைப் பற்றினால் கவலைகள், கஷ்டங்கள் நீங்கி பேறு பெறலாம். நாகை மாவட்டம், சீர்காழியைச் சுற்றியுள்ள தலங்களில் பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் அமைந்துள்ள இந்த ஆலயங்களை திட்டமிட்டு ஒரே நாளில் தரிசித்து நரசிம்மரின் அருளைப் பெறலாம். அவை: ஸ்ரீ உக்கிர நரசிம்மர், ஸ்ரீ வீர நரசிம்மர், ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் என  பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசித்தால் மாபெரும் பேறுகளை பெறலாம். பஞ்ச நரசிம்மர் திருத்தலங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

திருக்குறையலூர் ஸ்ரீ உக்கிர நரசிம்மர்: சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே திருக்குறையலூர் என்று மருவி அழைக்கப்படுகிறது.பஞ்ச நரசிம்ம திருத்தலத்தின் வரிசையில் முதல் தலம் இது. இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ உக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான இங்கு அவருக்கும்  குலசேகராழ்வாருக்கும் சன்னிதிகள் உள்ளன. பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் அகலும். நரசிம்ம ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசித்தால் நீங்காத செல்வம் கிட்டும்.

மங்கைமடம் ஸ்ரீ வீர நரசிம்மர்: மன்னனாகப் பிறந்து ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் போற்றப்பட்டதற்குக் காரணமான திருத்தலம். சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்து தோஷத்திற்கு ஆளான சிவபெருமான், மயன் மற்றும் யமன் ஆகியோருக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ நரசிம்மராகத் திருக்காட்சி தந்தருளிய தலம் இது. இந்தக் கோயிலின் மூலவர் ஸ்ரீ வீர நரசிம்மர். சாளக்ராமக் கல்லினால் ஆன அழகுத் திருமேனி. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீரங்கநாதர். தாயார் ஸ்ரீ செங்கமல வல்லி தாயார்.

மங்கைமடம் ஸ்ரீ வீர நரசிம்மர்
மங்கைமடம் ஸ்ரீ வீர நரசிம்மர்

விரும்பியபடி மண வாழ்க்கை அமையவும், பிரிந்த தம்பதி சேரவும், அரசியலில் வெற்றி பெறவும், மரண பயத்தை வெல்லவும் இங்கேயுள்ள செங்கமல புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீ நரசிம்மருக்கு துளசி மாலை சாத்தி வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படையலிட்டு வழிபட்டால்  விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

திருநகரி ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர்: மங்கை மடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநகரி ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்தங்களும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் இது. ஹிரண்யனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ ஹிரண்ய சம்ஹார நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை அகலும்.

ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர்
ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர்

யோக நிலையில் உள்ள ஸ்ரீ நரசிம்மரை வணங்கித் தொழுதால், மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்; ஞானத்துடன் திகழ்வார்கள். யோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூ மாலை சாத்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் புது வீடு கட்டும் வாய்ப்பு அமையும். ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப் பூக்கள் சாத்தி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் பொங்கும்.

திருவாலி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
திருவாலி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

திருவாலி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்: சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் பூம்புகார் செல்லும் சாலையில் ஐந்தாவது திருத்தலமான திருவாலி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை தனது வலது தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் கர்ப்பம் தரிக்காமைக்கு இதுவும் ஒரு காரணமா?
திருக்குறையலூர் ஸ்ரீ உக்கிர நரசிம்மர்

வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள், விவசாயம் செழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், முதலீடு செய்கிற பணத்தையும் விதையையும் ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினால், தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சீர்காழிக்குச் சென்றால் அவசியம் பஞ்ச நரசிம்மர்களையும் வணங்கி வழிபட்டு வளம் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com