பொதுவாக, கோயில்களில் திருவிழா காலங்களில் கொடியேற்றம் நடைபெறும். எந்த ஆலயத்தில் கொடி ஏற்றப்படுகிறதோ அந்த ஆலயத்தின் வாகனத்தை கொடியில் எழுதி அதற்கு பூஜை செய்து கொடி மரத்தின் உச்சியில் ஏற்றுவார்கள். சிவாலயங்களில் ரிஷபக் கொடி ஏற்றப்படும். ரிஷபம் தர்மமாகவும், ஆன்மாவின் உருவமாகவும் எண்ணப்படுவதால், ஆன்மாக்களையும், தர்மத்தையும் கீழ் நிலையில் இருந்து உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இறைவனின் கருணையை கொடியேற்றத்தின் மூலம் காண முடியும். விழா என்பது கொடியேற்றத்துடன் தொடங்கி, தீர்த்தவாரி வரை யாகசாலையில் யாகம் நடைபெறுவது ஸ்திதி என்ற காக்கும் தொழிலைக் குறிக்கும்.
வாகனங்களின் தத்துவம்:
விருட்சத்தடி சேவை: முதல் நாள் இரவு மரத்தடியில் சிவபெருமான் வீற்றிருப்பதாக விளங்கும் விருட்ச வாகனத்தில் பவனி வர செய்வதை ‘விருட்சத்தடி சேவை’ என்பார்கள். இது இறைவன் மரத்தடியில் இருந்து சிருஷ்டிக்கெல்லாம் வேர் போல இருந்தருளுவதை உணர்த்துவதாகும். இதனை ‘சிருஷ்டிக் கோலம்’ என்றும் கூறலாம்.
சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்கள்: சூரிய பிரபை, சந்திர பிரபையில் இறைவன் எழுந்தருளும் காட்சி ‘ஸ்திதி கோலமாகும்.’ சந்திரன் தனது ஒளியால் உயிர்களுக்கு இன்பத்தை அளிப்பது போலும், சூரியன் உலகிற்கு வெப்பம், மழை மூலம் தானியங்களை உற்பத்தி செய்யவும், சூரியக் கதிர்களால் கிருமிகளிடமிருந்து நம்மையும், உலகத்தையும் காப்பது போன்று இறைவனின் கருணையை இந்த வாகனங்கள் உணர்த்துகின்றன.
அன்ன வாகனம்: பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் நீரை விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல உலகில் நன்மைகள், தீமைகள் இரண்டும் கலந்திருந்தாலும் தீமையை விடுத்து நன்மையை மட்டும் மனிதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். இதனை ‘ஹம்ச வாகனம்’ என்றும் கூறுவார்கள்.
யானை வாகனம்: ஐராவதம் எனும் வெள்ளை யானை திருமாலிடமிருந்து தோன்றி பின்பு இந்திரனுக்கு வாகனமானதாகக் கூறப்படுகிறது. உலகினை அஷ்ட யானைகள் தாங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதனை ‘அஷ்டதிக் கஜங்கள்’ என்று கூறுவார்கள்.
சிங்கம், புலி வாகனங்கள்: அம்பாளின் வாகனங்களாக சிங்கம் மற்றும் புலிகள் அடையாளப்படுத்தப்படும். சிங்கம் என்பது வீரம், தைரியம் போன்றவற்றின் அடையாளம். இவை கோபம், ஈகோ, அநீதி போன்ற பேய் குணங்களை நசுக்கிய பிறகு, தன்னைப் பற்றிய உயர்ந்த உணர்த்தலாக குறிக்கப்படுகிறது. ரஜோ குணத்தின் வடிவமாக இருக்கும் புலியை அம்பிகை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக அடக்கி அதன் மீது அமர்ந்து ஆட்சி புரிகிறாள் என்பதை சித்தரிக்கும் வடிவம்தான் இது.
காமதேனு வாகனம்: பாற்கடலைக் கடையும்பொழுது தோன்றிய அற்புதமான பொருட்களில் காமதேனுவும் ஒன்று. காமதேனு விரும்பிய அனைத்தையும் அளிக்க வல்லது. தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு காமதேனு வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
மயில் வாகனம்: சூரனின் உடலை இரண்டாகப் பிளந்த முருகன், ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவல் கொடியாகவும் மாற்றி தன் அருகில் வைத்துக் கொண்டார். அசுர குணத்தோடு இருந்தாலும் முருகனை சரணடைந்ததும் சாந்தமானதை போல் அவருடைய பக்தர்கள் அவரை சரணடையும்போது மன அமைதியும், சாந்தமும் பெறுவார்கள் என்பதை உணர்த்துவதாகும்.
குதிரை வாகனம்: அம்பிகையின் பாசம் எனும் ஆயுதத்தில் இருந்து தோன்றியவள் அஷ்வாரூடா தேவி. இவள் யாராலும் வெல்ல முடியாத ‘அபராஜிதம்’ எனும் குதிரையை வாகனமாகக் கொண்டு கோடிக்கணக்கான குதிரைப்படைக்கு தலைமை ஏற்று பண்டாசுரவதத்தின்பொழுது தேவிக்கு உதவினாள். பலவிதமான ஆசைகள் நம்மை அலைக்கழிக்கின்றன. ஆசைகளை நெறிப்படுத்தும் மனமே அஸ்வாரூடா தேவி. சக்தி வாய்ந்த இயக்கத்தை ‘ஹார்ஸ் பவர்’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா!