நாம் கோயிலுக்குள் நுழைந்ததும் நமது கண்களில் முதலில் தென்படுவது பலி பீடத்துக்கு அருகில் நெடிதுயர்ந்து காணப்படும் கொடிமரம்தான். இந்தக் கொடிமரம் மூலவரின் கருவறையை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும். கொடிமரத்தை, ‘துவஜஸ்தம்பம்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கொடிமரத்தின் அடிப்பகுதியில் பிரம்ம தேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேற்பகுதியில் சிவபெருமானும் உறைந்திருப்பதாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மோத்ஸவம் போன்ற கோயில் திருவிழா காலங்களில் கொடிமரத்தின் உச்சியில் தெய்வ வடிவத்துடன்கூடிய வஸ்திரத்திலான கொடி ஏற்றப்படுகிறது. இதன் காரணமாகவே இது கொடிமரம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு கோயிலின் பிரதான தெய்வ மூர்த்தம் மற்றும் பரிவார தெய்வம் என அனைத்து தெய்வாம்சங்களும் இந்தக் கொடிமரத்தில் உறைந்திருப்பதால்தான் கொடிமரத்தின் அருகில் மட்டும் அக்கோயில் இறைவனை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது ஆலய விதிமுறையாக உள்ளது.
ஆகம விதிகளின்படி அமைக்கப்படும் கோயில்கள் அனைத்திலும் பெரும்பாலும் கொடிமரங்கள் அமைந்திருக்கும். கோயில் கொடிமரத்துக்கான மரம், உயரம், பருமன், அதை தயார் செய்யும் முறை, கோயிலில பிரதிஷ்டை செய்யும் முறை ஆகியவை குறித்து ஆகம விதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. திருவிழா சமயங்களில் இந்தக் கொடிமரத்தில் ஏற்றப்படும் துணியிலான கொடியில், சம்பந்தப்பட்ட கோயிலின் தெய்வத்தின் அடையாளமும் அந்த தெய்வத்தின் வாகனமும் இடம் பெற்றிருக்கும். ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள் கொடிமரத்தின் கீழே விழுந்து நமஸ்கரிக்கும்போது அவர்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதோடு, அதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கி அந்த ஆலயத்தைப் பாதுகாக்கும் மாபெரும் சக்தியாகவும் கொடிமரங்கள் விளங்குகின்றன.