கயிலாய பர்வதம், திபெத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மலை 21,778 அடி உயரம் கொண்டது. கருப்புக் கற்களால் ஆனது போன்று காட்சி தரும் இந்த மலையில் காலை சூரிய ஒளிப்படும்போது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இம்மலையில் சூரிய ஒளி படுவதனால், மலை முழுக்க தங்க நிறத்தில் மாறி தீப்பிழம்பு போல காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கயிலாய பர்வதம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது. இம்மலை 30 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் உறைவிடம் என்றும் பலராலும் நம்பப்பட்டு புனிதமாக கருதப்படும் இந்த மலைக்கு வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெறுங்கால்களால் நடந்து வந்து வழிபடுவது உண்டு. கயிலாய பர்வதத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சிலர் இந்த மலையை சொர்க்கத்திற்கு செல்லும் வழி என்றும் கூறுகிறார்கள்.
கயிலாய மலையின் அடிவாரத்திலிருக்கும் இரண்டு ஏரிகளும் தன்னுள் பல மர்மத்தை மறைத்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மானசரோவர் (Manasorovar) மற்றும் ராக்ஷச தால் (Rakshas tal) ஆகிய இரு ஏரிகளுக்கு நடுவே இரண்டு கிலோ மீட்டர் தொலைவே இருப்பினும் இரண்டு ஏரிகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவது அதிசயமாகவே உள்ளது. மானசரோவர் நன்னீர் ஏரி, ராக்ஷச தால் உப்பு நீர் ஏரியாகும். இந்த இரண்டு ஏரிகளும் சூரியன் மற்றும் நிலவை குறிப்பிடுகிறது என்பது பக்தர்ளின் நம்பிக்கை.
கயிலாய மலையின் தனித்துவமான அமைப்பு பலரை இந்த மலை பிரமிட் போல மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று நம்ப வைக்கிறது. இதுவரை கயிலாய பர்வதத்தை மனிதர்களால் ஏறி உச்சிக்கு செல்ல முடியவில்லை. அதற்கான முக்கியமான காரணங்களாக கருதப்படுவது,
* கயிலாய பர்வதம் அதன் புனிதத்திற்கு பெயர்போன மலை. இந்து, ஜெயினர்கள், புத்த துறவிகள் மற்றும் திபெத்தியர்கள் இந்த மலையை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். அதனால் அந்த மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* கயிலாய பர்வதத்தின் காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் அது இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் இந்த மலையை ஏறுவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.
* செங்குத்தான சரிவும், அடிக்கடி ஏற்படும் பனிப்பொழிவும் இம்மலையில் ஏறுவதற்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கிறது.
* திபெத்தியர்களின் புராணத்தில், ‘மிலரேபா’ எனும் துறவி கயிலாய பர்வதத்தை ஏறியவர் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு இதுநாள் வரை யாராலும் கயிலாய மலையை ஏற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* கயிலாய பர்வதத்தில் ஏறினால் அங்கே நேரம் வேகமாக ஓடுவதாகக் கருதப்படுகிறது. கயிலாய பர்வதத்தில் 12 மணி நேரத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு, நகங்களும், தலைமுடியும் சில மில்லி மீட்டர் அளவு வேகமாக வளர்வதாகக் கூறுகிறார்கள்.
கொலெனல் வில்சன் (Colonel wilson) எனும் மலையேற்றம் செய்பவர் கயிலாய மலையை ஏற முயற்சித்து தோற்றுப்போனார். அவர் கூறியது என்னவென்றால், ‘முதலில் ஏறுவதற்கு சுலபமாகத் தெரிந்தாலும், அதிகமாக பனிப்பொழிவு இம்மலையை ஏறுவதைக் கடினமாக்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரெயின்ஹோல்ட் மெஸ்னர் (Reinhold messner) மிகவும் பிரபலமான இத்தாலிய மலையேற்றம் செய்பவர். அவரிடம், ‘கயிலாய பர்வதத்தை ஏற முயற்சிக்கக் கூடாதா?’ என்று கேட்டபோது, அவர் கயிலாய பர்வதத்தில் ஏற மறுத்துவிட்டார். மேலும் அவர், ‘If we conquer this mountain then we conquer something in people's soul’ என்று கயிலாய மலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கயிலாய பர்வதத்திற்கு ஆன்மிக ரீதியாக நிறைய பக்தர்கள் பயணிக்கிறார்கள். இந்த மலையை சுற்றி வர மூன்று நாட்கள் ஆகிறதாம். மொத்தம் 52 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது. இம்மலையை வலஞ்சுழியாக சுற்றி வரவேண்டும் என்று பக்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆன்மிக ரீதியாக மட்டுமில்லாமல், சுற்றுலா ரீதியாகவும் இம்மலையை காண சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் வருகிறார்கள். காலை மற்றும் மாலை இருவேளையும் சூரிய உதயம் மற்றும் மறைவின்போது சூரிய ஒளி இம்மலையின் மீது படும்போது அற்புதமான காட்சியாக இருக்கிறது. இந்த நிகழ்வினைக் காணவே பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது.