ஸ்ரீரங்கம், புகழ் பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றாகும்.108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. அத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் அருளும் உத்ஸவருக்கு, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் வரக் காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் மீது 13ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் படையெடுத்து வந்தனர். கோயிலைப் பாதுகாக்க அங்கிருந்த 12,000 வைஷ்ணவர்களை கொன்று குவித்தனர். முகலாயப் படையெடுப்பிலிருந்து ஸ்ரீரங்கநாதர் உத்ஸவர் சிலையைப் பாதுகாக்க நினைத்த அர்ச்சகர்கள், அச்சிலையை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்றுவிட்டனர்.
அதற்குப் பிறகு, 48 வருடங்கள் கழித்து உத்ஸவர் சிலை ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறது. ஆனால், அதற்குள்ளேயே புதிய உத்ஸவர் சிலையை அடியார்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பக்தர்கள் எல்லோருக்கும், ‘எது உண்மையான உத்ஸவர் சிலை என்பதில் ஒரே குழப்பம். ‘பழைய உத்ஸவர் சிலையை கும்பிட்டவர்கள் யாராவது இருந்தால் வந்து கண்டுபிடித்து சொல்லுங்கள்’ என்று கூறுகிறார்கள்.
அப்போது வயதான முதியவர் ஒருவர் வருகிறார். அவருக்குக் கண் பார்வையில் குறைபாடு இருக்கிறது. அவர் சொல்கிறார், “என்னுடைய அப்பா சலவை தொழிலாளி. அவர்தான் ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் ஆடைகளை சலவை செய்துக் கொடுப்பார். அப்போது அந்த ஆடையிலிருக்கும் திருமஞ்சன தீர்த்தத்தை எனக்குக் கொடுப்பார். அதை சாப்பிட்டு பழகியதால், என்னால் உண்மையான உத்ஸவர் சிலையைக் கண்டுபிடிக்க முடியும்” என்று கூறுகிறார்.
அதோடு, ‘‘இரண்டு உத்ஸவர் சிலையையும் வைத்து திருமஞ்சனம் செய்து அந்தத் தீர்த்தத்தை எனக்குத் தாருங்கள். நான் அதைப் பருகி, உண்மையான உத்ஸவரை கண்டுபிடித்துச் சொல்கிறேன்” என்று கூறுகிறார். அதையேற்று, அப்போது வழிபாட்டில் இருந்த உத்ஸவர் சிலையின் திருமஞ்சன தீர்த்தத்தைக் கொடுக்கிறார்கள். பிறகு 48 வருடங்கள் கழித்து வந்த உத்ஸவர் சிலையின் திருமஞ்சன தீர்த்தத்தைக் கொடுக்கிறார்கள். அதை வாங்கிப் பருகிய அந்தப் பெரியவர், இவர்தான் ‘நம்பெருமாள்’ என்று கத்துகிறார்.
அன்றிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு, ‘நம்பெருமாள்’ என்ற பெயரும் வந்தது. அன்று முதல் அழகிய மணவாளன் என்ற பெயரைக் காட்டிலும் ‘நம்பெருமாள்’ என்ற பெயரே பிரசித்திப் பெற்று விளங்குகிறது. புதிதாக வந்த உத்ஸவர் 'திருவரங்க மாளிகையார்' என்ற பெயரும் பெற்றார். இதைக் கண்டுப்பிடிக்க உதவிய பெரியவருக்கு கோயில் சார்பில் அப்போது பெரிய மரியாதையும் செய்யப்பட்டது.