தஞ்சை கோயிலுக்கும் கருவூர் சித்தருக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கின்றது. கருவூர் சித்தருக்கென்று தனிச் சன்னிதி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கொன்றை மரத்தின் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தஞ்சை பெரிய கோயிலில் லிங்கப் பிரதிஷ்ட்டை செய்யும்போது அஷ்டபந்தன மருந்தை சாத்துகிறார்கள். அஷ்டபந்தன மருந்து இறுக்கமாக இருந்தால்தான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை பண்ண முடியும். ஆனால், அந்த மருந்து இறுகாமல் இளகிக்கொண்டே இருந்தது. இதனால், கருவறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யவே முடியவில்லை. எத்தனையோ சிவாச்சாரியார்கள் முயன்றும் முடியவில்லை. இதைக் கேட்ட ராஜராஜ சோழன் மிகவும் மன வருத்தம் அடைந்தார்.
இதை அறிந்த போகர் சித்தர், தனது சீடனின் மகிமையை உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்து கருவூராரை தஞ்சைக்கு வரச் சொல்கிறார். தனது குருவின் ஆணைப்படி தஞ்சைக்கு வருகிறார் கருவூர் சித்தர். அதுவரை இறுகாமல் இருந்த அஷ்டபந்தன மருந்தை சிவ சிந்தனையோடு கையில் எடுக்கிறார் கருவூரார். என்ன ஒரு அதிசயம்! அதுவரை இறுகாமல் இருந்த அஷ்டபந்தன மருந்து அப்போது இறுகியது. எனவே, லிங்க பிரதிஷ்டையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் கருவூர் சித்தர்.
‘பந்தனம்’ என்பது இணைப்பதைக் குறிக்கிறது. இதில் எட்டு பொருட்களின் கலவை அடங்கி உள்ளதால், அஷ்ட பந்தனம் என்று சொல்லப்படுகிறது. இது பீடத்தையும், சிலையையும் உறுதியாக இணைக்க உதவுகிறது. பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக அஷ்ட பந்தன மருந்தை சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து தெய்வ மூர்த்தத்தை பீடத்துடன் அழுத்திப் பிடித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொங்குநாட்டின் கரூரில் பிறந்தவர் கருவூர் தேவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது பெயரை கருவூர் தேவர் என்று அழைப்பார்கள். இவர் அந்தணக் குலத்தில் பிறந்து வேதாகமக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இவர் மிகபெரிய யோக சித்தர். போக முனிவரின் ஆலோசனையைப் பெற்று நூல்கள் பலவற்றை ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயக்கல்பம் உண்டவர். இவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டை நாடு, நடுநாடு ஆகிய இடங்களில் இருக்கும் கோயில்களை தரிசித்துவிட்டு கடைசியாக திருப்புடைமருதூர் சென்று இறைவனின் திருவடி தீட்சை பெற்றார் என்பது வரலாறு.