சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

Seven immortal beings
Seven immortal beingsImage credits: Mythological Geek

சிரஞ்சீவி என்றால் சாகாவரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த மனிதர்கள் சிறிது காலம் வாழ்ந்து இறந்து விடுவார்கள். ஆனால். சீரஞ்சீவிகள் சாகாவரம் பெற்றவர்கள். இவர்களுக்கு அழிவு என்பதே கிடையாது.

சிரஞ்சீவியாக வாழ்வதை வரமென்று சொல்வதா? இல்லை சாபம் என்று சொல்வதா?கலி யுகம் முடியும் வரை இந்த சிரஞ்சீவிகளும் இருப்பார்கள். அப்படி சிரஞ்சீவிகளாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழு பேர்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

அஸ்வத்தாமன்: துரோணாச்சாரியாருக்கும் கிரிப்பிக்கும் மகனாகப் பிறந்தவர் அஸ்வத்தாமன். எல்லா ஆயுதங்களையும் உபயோகிக்கத் தெரிந்த இவர், கௌரவர் சார்பாக குருக்ஷேத்ர போரில் போரிட்டார். இரவோடு இரவாக பாண்டவர்களின் மகன்களான உபபாண்டவர்களை கொன்ற இவர், உத்தரையின் கருவில் இருக்கும் குழந்தையை அழிக்க பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். இதனால் கோபம் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், 'இதுவரை பூமியில் பிறந்த எல்லா மக்களின் பாவங்களையும் நீயே அனுபவிப்பாய். உணவு, தண்ணீர் இன்றி அல்லல்பட்டு ஒரு மோசமான வாழ்வை கலியுகம் முடியும் வரை வாழ்வாய்' என்று சாபம் கொடுத்தார். இப்பொழுதும் குஜராத்தில் உள்ள நர்மதை நதிக்கரையோரம் நோய்வாய்ப்பட்ட முதியவனாய் அஸ்வத்தாமன் உலா வருவதாய் அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

மகாபலி சக்கரவர்த்தி: விஷ்ணு பகவானின் பக்தனான பிரகலாதனின் தாத்தாவான மகாபலியிடம் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டார். முதல்அடிக்கு மண் உலகத்தையும், இரண்டாவது அடிக்கு விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு மூன்றாவது அடியை மகாபலியின் தலையிலே வைத்து அவரை பாதாள உலகிற்கு மன்னனாய் அனுப்பினார். இன்னும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மகாபலி தனது நாட்டு மக்களை ஒவ்வொரு வருடமும் வந்து சந்திக்க வரம் வாங்கினார். அந்த நாளைத்தான் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.

வேத வியாசர்: மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் இவர், பராசர முனிவருக்கும் சத்யவதிக்கும் மகனாகப் பிறந்தவர். கிருஷ்ண துவைப்பாயணர் என்ற இயற்பெயரைக் கொண்டவர். சிதறிக் கிடந்த 4 வேதங்களையும் 18 புராணங்களையும் தொகுத்ததால் வியாச முனிவர் என்று பெயர் பெற்றார். இவர் சிரஞ்சீவியாக கலியுகம் முடியும் வரை இருப்பார் என்று குறிப்புகள் உள்ளது.

ஆஞ்சனேயர்: அஞ்சனைக்கும் வாயு பகவானுக்கும் புத்திரனாக பிறந்த அனுமன் ராமாயணத்தில் புகழ் பெற்றவராவார். சீதையை இலங்கையில் கண்டுபிடித்தது, லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை தூக்கி வந்தது, அக்னி பிரவேசம் செய்யவிருந்த பரதனை காப்பாற்றியது என எத்தனையோ உதவிகளைச் செய்த அனுமனுக்கு சீதா தேவி சிரஞ்சீவியாக இருக்க வரம் தந்தார்.

விபீஷ்ணர்: ராவணனுக்கும், கும்பகர்ணனுக்கும் சகோதரனாவார். விஷவ மகரிஷிக்கும் கைகேசிக்கும் பிறந்தவர். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீராம பக்தராக வாழ்ந்த இவர், ஆரம்பத்திலிருந்தே சீதையை சிறை வைத்ததை வன்மையாகக் கண்டித்தார். இராமபிரானிடம் சரணடைந்து அவருக்கு உதவியும் புரிந்து இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
நிறம் மாறும் நாகக்கோவில் புற்று மண். அதிசய கோவில் எங்குள்ளது தெரியுமா?
Seven immortal beings

கிருபாசாரியார்: குருக்ஷேத்ர போரில் கௌரவர் பக்கம் போரிட்டு தப்பிப் பிழைத்தவர் இருவர். ஒன்று அஸ்வத்தாமன், இன்னொன்று அவருடைய தாய்மாமனாகிய கிருபாசாரியார் ஆவார். ரிஷி சரத்வானருக்கும், ஜனபதிக்கும் மகனாகப் பிறந்த இவர், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருவாக இருந்திருக்கிறார். கலியுகத்தில் சப்த ரிஷிகளுள் ஒருவராக திகழப்போவதாக  மகாபாரதம் சொல்கிறது.

பரசுராமர்: பரசுராமர் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாகத் தோன்றியவர். மகாவிஷ்ணுவின் அவதாரமாவார் பரசுராமர். சிவபெருமானிடமிருந்து அம்பையும், கோடரியையும் வரமாகப் பெற்ற இவர்தான் கேரளாவின் புகழ் பெற்ற களரியை பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்திற்கு குருவாக இருந்து எல்லா அஸ்திரங்களையும் கற்பிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com