எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிபவன் அஞ்சனை மைந்தன் அனுமன். அனுமனை பஞ்சமுக ஆஞ்சனேயராக வழிபாடு செய்ய சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகுதல் என அனைத்து நலன்களும் உண்டாகும். நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் மிகவும் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. ஹனுமன் முகம், நரசிம்ம முகம்,கருட முகம், வராக முகம், ஹயக்ரீவ முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முக வடிவில் ஒருங்கிணைந்து உள்ளதே பஞ்சமுக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார்.
பஞ்சமுக ஆஞ்சனேயர் மந்த்ராலய மகானான ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் உபாசனை தெய்வமாக திகழ்கிறார். அவர் பஞ்சமுக ஆஞ்சனேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என அழைக்கப்படுகிறது. அங்கு பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திலும் பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூருக்கு அருகில் உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் சுவாமி கோயில் உள்ளது.
நம் நாட்டில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உண்டு. புதுச்சேரி அருகே பஞ்சவடி எனும் ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களை கொண்ட தசமுக ஆஞ்சனேயரும் உண்டு.
பஞ்ச முகங்களின் முக்கியத்துவம்:
1. கிழக்கு திசையை நோக்கி உள்ள அனுமன் முகம் சகல கிரக தோஷங்களையும் போக்குவதுடன் மனதையும் தூய்மைப்படுத்தும்.
2. தெற்கு திசையை நோக்கியுள்ள ஸ்ரீ நரசிம்மர் முகம் தீமையை போக்கும். நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தை போக்குவதுடன் நம்மை வெற்றி பெறவும் வைக்கும்.
3. மேற்கு திசை நோக்கிய கருட முகம் தீய சக்திகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் தீய விளைவுகளை போக்குவதுடன், விஷக்கடியால் ஏற்படும் விஷத்தையும் முறிக்கும். பிணி தீர்க்கும் கருட முகம்.
4. வடக்கு திசை நோக்கிய வராக முகம் சாந்தியும் நிம்மதியும் தருவதுடன் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும்.
5. மேலோக்கி உள்ள ஹயக்ரீவ முகமானது நமக்கு கல்வியும் ஞானத்தையும் தருவதுடன் எடுத்த காரியங்களில் வெற்றியையும், புத்திர பாக்கியத்தையும் அளிக்க வல்லது.
அனுமனுக்கு பஞ்ச முகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. ராம - ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் நிலையில் அவனை காப்பாற்ற மயில் ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்து விட்டால் ராம லக்ஷ்மணர்கள் அழிந்து விடுவார்கள். எனவே அவனுடைய யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சனேயர் விரும்பினார். ஸ்ரீ ராமனின் உத்தரவு பெற்று மயில் ராவணனின் யாகத்தை தடுக்க புறப்பட்ட அனுமன் நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்ரீவர் ஆகியோரை வணங்கி ஆசி பெற அவர்களும் தங்களுடைய சக்திகளை அனுமனுக்கு வழங்கியதுடன் அவருடைய முகங்களாகவும் திகழ்ந்தனர். பஞ்சமுக ஆஞ்சனேயர் தலங்களில் தனிச்சிறப்பு மிக்கது பஞ்சவடி ஆலய கோவிலாகும். இது திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.