
நம்முடைய பக்தியை இறைவனுக்கு வெளிக்காட்ட பொன்னும், பொருளும் தேவையில்லை. தூய்மையான பக்தி ஒன்று இருந்தாலே போதுமானதாகும். இதைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ள பூசலார் கதையைப் பற்றிப் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் திருநின்றவூர் என்ற ஊரில் பூசலார் என்ற சிவன் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் மிகவும் ஏழையாக இருந்தாலும், சிவனுக்காக ஒரு பெரிய கோவில் கட்ட வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது.
இவரிடம் பணம் இல்லாத காரணத்தால், மனதிலேயே சிவனுக்காக கோவில் கட்டத் தொடங்கினார். தினமும் மனம் முழுவதும் பக்தியோடு அடிக்கல் நாட்டி, சுவர் எழுப்பி சிறிது சிறிதாக கோவில் கட்டத் தொடங்கினார்.
கோவில் கட்டத் தொடங்கி ஆண்டுகள் கடந்தது. இவர் மனதால் கற்பனையில் கட்டிய மனக்கோவில் முழுமையாக முடிந்தது. மகிழ்ச்சியுடன் அவர் கும்பாபிஷேகம் நடத்தும் தேதியை நிர்ணயித்து சிவபெருமானை மனதார வேண்டிக் கோவிலுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்தார்.
அதேசமயத்தில் பல்லவ அரசன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோவிலைக் கட்டி முடித்திருந்தான். அவனும் அதே தினத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தான். அன்று இரவு அரசனின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘நான் உன் கோவிலுக்கு வர முடியாது. அதே தினத்தில் பூசலார் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
இதைக்கேட்ட அரசன் அதிர்ச்சியடைந்தார். ‘நாம் கட்டிய கோவிலை விட அப்படி என்ன அந்த பூசலார் கட்டிய கோவில் சிறந்தது?' என்று நினைத்துக் கொண்டு அந்த கோவிலை காண நேரில் சென்றான். அரசன் நிருநின்றவூர் முழுவதும் தேடியும் எங்கேயும் கோவில் இல்லை. அங்கே இருந்தது மனதார சிவபெருமானை நினைத்து பூஜை செய்யும் பூசலார் மட்டுமே. இப்போது உண்மையை அறிந்துக்கொண்ட அரசன் பூசலாரின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.
அப்போது சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, ‘உன் பக்தி முன்பு எந்த பொருட்களுமே அடங்காது. உண்மையான கோவில் என்பது இதுதான்!’ என்று கூறி ஆசி வழங்கினார். பிறகு பூசலாரின் நினைவாக திருநின்றவூரில் இருதய ஆலய ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கதையின் மூலமாக உண்மையான பக்திக்கு பொருள் தேவையில்லை. துய்மையான பக்தியும், அன்பும் இருந்தாலே போதுமானது என்பது தெளிவாக விளங்குகிறது.