‘விசுவஜித்’ என்பது உலகம் முழுவதையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவர்களால் செய்யப்படும் ஒரு யாகம். வாஜசிரவஸ் என்பவனுக்கு விசுவஜித் யாகத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த யாகத்தைச் செய்பவன் தன்னிடமுள்ளவற்றை தானம் செய்ய வேண்டும். அப்போதுதான் உலகத்திலுள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமாகும்.
யாகத்தின் முடிவில் வாஜசிரவஸோ தன்னிடம் இருந்த செல்வத்தில் நல்லவற்றையெல்லாம் தானே வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத கிழட்டுப்பசு முதலானவற்றை தானமாகத் தந்தான்.
வாஜசிரவசின் மகன் பெயர் நசிகேதன். நசிகேதன் தனது தந்தை செய்யும் மாபெரும் தவறைப் பார்த்து வருந்தினான். யாகம் செய்வதற்கான பலன் கிடைக்காமல் போவதும் ஒன்றுக்கும் உதவாத பொருட்களைத் தானம் செய்வதால் நரகம் கிடைக்கும் என்பதே அவன் வருத்தத்திற்குக் காரணமாக இருந்தது.
நசிகேதன் தந்தையின் தவறை சுட்டிக்காட்டினான். ஆனால் தந்தையாரோ அதை ஏற்பதாய் இல்லை. கடைசி முயற்சியாக தனது தந்தையிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் நசிகேதன்.
“தந்தையே. விசுவஜித் யாகத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். என்னை யாருக்கு தானமாகத் தரப்போகிறீர்கள்?” என்றான்.
நசிகேதனின் தந்தை வாஜசிரவஸ் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அவன் தனது தந்தையிடம் ‘என்னை யாருக்குத் தானமாகத் தரப் போகிறீர்கள்’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான். இதனால் பெருங்கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்கு தானமாகத் தருகிறேன்” என்று கூறிவிட்டான். சிறிது நேரம் கழித்து தான் கூறியதன் பொருளை உணர்ந்த வாஜசிரவஸ் மிகவும் வருந்தினான்.
நசிகேதன் தனது தந்தையின் வாக்குப்படி எமலோகம் புறப்பட்டுச் சென்றான். நசிகேதன் எமலோகம் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லாததால் மூன்று நாட்கள் காத்திருந்தான். எமதர்மன் தனது மாளிகைக்குத் திரும்பியதும் மந்திரிகள், “நசிகேதன் என்ற சிறுவன் மூன்று நாட்களாக தங்களைச் சந்திப்பதற்காக காத்திருக்கிறான்” என்ற விஷயத்தைக் கூறினார்கள்.
‘தன்னைச் சந்திப்பதற்காக வந்தவனை மூன்று நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டோமே’ என்று நினைத்து வருந்திய எமதர்மன், உடனே நசிகேதனை நாடிச் சென்றார்.
“நசிகேதனே, என்னைச் சந்திக்க வந்த உன்னை மூன்று நாட்கள் காக்க வைத்துவிட்டேன். இதற்காக நீ என்னிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெறலாம்” என்றான்.
நசிகேதனிடம் எமதர்மன் இவ்வாறு கூற, யோசித்த நசிகேதன் முதலாவதாய் ஒரு வரத்தைக் கேட்டான். “எமதர்மராஜனே. நான் இங்கிருந்து திரும்பிச் சென்றதும் எனது தந்தையார் என்னை மனப்பூர்வமாய் முழுமையான தெளிந்த மனதுடன் தனது மகனாய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நான் வேண்டும் முதல் வரம்” என்றான்.
“அப்படியே ஆகட்டும்” என்றான் எமன்.
அடுத்து, நசிகேதன் தனது இரண்டாவது வரத்தைக் கேட்டான். “சொர்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி தாங்கள் எனக்கு போதிக்க வேண்டும்” என்றான்.
எமதர்மன் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றிக் கூற, மிக கவனமாய் அதைக் கேட்டுக் கொண்டான் நசிகேதன். “இனி இந்த யாகம் உன்னுடைய பெயரால் ‘நசிகேத யாகம்’ என்று அழைக்கப்படும் என்று கூறி அழகிய இரத்தின மாலை ஒன்றையும் பரிசளித்தான்.
இப்போது நசிகேதன் எமதர்மராஜனிடம் தனது மூன்றாவது வரத்தைக் கேட்டான். “எமதர்மராஜனே. மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதுவே நான் விரும்பும் மூன்றாவது வரமாகும்” என்றான்.
எமதர்மனோ இவ்வரத்தைத் தர விருப்பமின்றி, “என்னைக் கட்டாயப்படுத்தாதே. நீண்ட ஆயுள், நிலைத்த செல்வம் இரண்டையும் மூன்றாவது வரமாய் பெற்றுக் கொள்” என்று சொன்னார். நசிகேதனோ, ‘மரணத்திற்குப் பின்னால் மனிதனின் நிலை என்ன என்பதை மட்டுமே அறிய விரும்புகிறேன்’ என்று உறுதிபட தெரிவித்தான்.
நசிகேதனின் பிடிவாதத்தை உணர்ந்த எமதர்மராஜன் வேறு வழியின்றி மரணத்திற்குப் பின்னால் மனிதனின் நிலையினை போதித்து ஏராளமான பரிசுகளை அளித்து திருப்பி அனுப்பி வைத்தார். மரணத்திற்குப் பின்னர் மனிதனின் நிலை என்ன என்று விளக்குவதே ‘கடோபநிஷத்’ என்று அழைக்கப்படுகிறது.
நசிகேதனை அவனுடைய தந்தையார் எமதர்மன் அருளிய வரத்தின்படி மிக்க அன்போடு வரவேற்று ஏற்றுக் கொண்டார்.