பிறவிக்கடனை தீர்க்கும் உபாயம் தெரியுமா?

பிறவிக்கடனை தீர்க்கும் உபாயம் தெரியுமா?
Published on

ருவர் பிறந்த உடனேயே பிறவிக்கடனும் அவர் கூடவே ஒட்டிக் கொள்கிறதா என்கிற கேள்விக்கு பதில், ‘ஆம்’ என்பதுதான். ஆச்சர்யமாக உள்ளது அல்லவா? ஆம்… முதலாவதாக, தேவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். பிறக்கும்பொழுதே சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது அனைத்துத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்க அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது அல்லவா? அதனால் நாம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தேவர்களுக்கான கடனை அடைப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பது கூட இல்லை.

இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வேத வியாசர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தியடைகின்றனர். பொதுவாக, கலி யுக மக்கள் வேத சாஸ்திரங்களை வயதான காலத்தில் படிப்பதற்குக்கூட தயங்குகின்றனர்.

மூன்றாவதாக, பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். அவர்களுக்கு சிராத்த சடங்குகளை சரிவர செய்வதால்,  மூதாதையர்கள் திருப்தியடைந்து, குலம் தழைக்க ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை, ‘பித்ரு யாகம்’ எனக் கூறுவார்கள். சிராத்த சடங்கு செய்யாத பட்சத்தில் மூதாதையர்களின் மன வருத்தத்தினால் குடும்ப விருத்தி தடைபடுகிறது.

நான்காவதாக, சக மனிதர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவன், மனைவி, குழந்தைகள் என பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். அதே சமயம், விருந்தினர்களை நாம்  நன்கு உபசரித்தால் அவர்கள் திருப்தி அடைவார்கள். இதனை, ‘நிர் யாகம்’ என அழைப்பர். எதிரியே நம் இல்லத்துக்கு விருந்தினராக வந்தாலும், அவருக்கு விருந்து படைப்பது பண்பாடு. தற்போதைய காலக்கட்டத்தில் விருந்தினர்களை தவிர்க்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

ஐந்தாவதாக, இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்துக்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம். அந்த ஜீவன்களின் சேவையைப் போற்றுதல், ‘பூத யாகம்’ எனப்படுகிறது.

படிக்கும்பொழுது பயமாகத்தான் இருக்கிறது இல்லையா? இறக்கும் வரை கடன்காரர்களாகத்தான் இருந்துவிட்டு மடியப்போகிறோமா? இதற்கு விடிமோட்சம் உண்டா? இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன? ‘யாரொருவர்  முழுமையாக ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதத்தில் தஞ்சம் புகுகிறார்களோ, அவர்கள் தேவர்களுக்கோ, ரிஷிகளுக்கோ, பித்ருக்களுக்கோ, மனிதர்களுக்கோ மற்ற உயிர்வாழிகளுக்கோ கடன்பட்டவர்கள் அல்லர்’ என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com