இந்தக் கதை தெரியுமா?

இந்தக் கதை தெரியுமா?

பெருமாள் கோயில்களுள் மிக உயர்ந்ததாகக் கருதப்படுவது திருப்பதி வேங்கடாஜலபதி திருக்கோயில். பீமன் என்ற ஒரு குயவர் வசித்து வந்தார். இவர் பெருமாளின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பமாக எடுத்துக்கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். இதனால் சனிக்கிழமைகளில் கோயிலுக்குப் போக நேரம் இருக்காது. அப்படியே போனாலும் வழிபடும் பூஜை முறையும் தெரியாது. ‘பெருமானே நீயே எல்லாமே’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.

ஒருமுறை அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளை பார்க்க கோயிலுக்குப் போக நேரமில்லை; பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களி மண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்கும் அளவுக்குக்கூட அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்து மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து, அதை கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

அந்த ஊரை அரசாண்ட தொண்டைமானும் பெருமாள் தீவிர பக்தர். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை பெருமாளுக்கு அணிவிப்பது வழக்கம். ஒருமுறை இப்படி அணிவித்துவிட்டு மறுவாரம் வந்தார். அப்போது பெருமாளின் கழுத்தில் மண் பூமாலை தொங்கியது. அதைக்கண்ட அரசர், பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ எனக் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

அன்று இரவு அரசரின் கனவில் தோன்றிய பெருமாள் நடந்ததைச் சொன்னார். அந்தக் குயவனின் இல்லத்துக்கு நேரில் சென்று அரசர் அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல் பெருமாள் பணியை தொடர்ந்து செய்து வந்த அந்தக் குயவர் இறுதி காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைய்வேத்தியம் செய்யப்படுகிறது. திருப்பதி பெருமாள் பணக்காரர்தான். ஆனாலும் எளிமையைத்தான் அவர் விரும்புகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com