ஒரே இடத்தில் இரண்டு ஜீவசமாதி அமைந்த திருத்தலம் தெரியுமா?

ஒரே இடத்தில் இரண்டு ஜீவசமாதி அமைந்த திருத்தலம் தெரியுமா?

‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் போற்றப்படும் மயிலாப்பூரில் சித்தர்கள் நீராடிச் சென்ற சித்திரக்குளம் அருகே, மேற்கு மாட வீதியில் அமைந்துள்ளது குழந்தைவேலு சுவாமி மற்றும் முத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது இந்த இரு ஜீவசமாதிகள். இந்த ஜீவசமாதி ஆலயத்தில் கடந்த சித்திரை மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 300 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைவேலு சுவாமி சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளார். அடுத்ததாக, அவரது சிஷ்யர் முத்தையா சுவாமிகளும் அதே பூச நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளார்.

இக்கோயில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. குழந்தைவேலு சுவாமிகளின் ஜீவசமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரது சிஷ்யர் முத்தையா சுவாமிகள் ஜீவசமாதி மேல் நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குருவும் சிஷ்யரும் ஒரே இடத்தில் ஒரே நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கும் இந்த அற்புதமான கோயிலில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலில் நூறு வருடங்கள் பழைமையான வில்வ மரம் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும். ஒவ்வொரு பௌர்ணமியில் குரு பூஜையும், அமாவாசை, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. இந்தக் கோயிலில் விநாயகர், பாலாம்பிகை, பைரவர், பிரம்மா போன்ற மூர்த்தங்கள் உள்ளன.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு விளக்குகள் ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். அப்படி செய்யப்படும் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறி விடுவதாகவும் கூறுகின்றனர். மயிலாப்பூருக்கு வரும்போது இந்த இரண்டு சித்தர்களின் ஜீவ சமாதியை தவறாமல் கண்டு வணங்கி வாழ்க்கையில் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com