நம்முடைய குலதெய்வத்தின் மீது நாம் நிறையவே அன்பும், பக்தியும் வைத்திருப்போம். அந்த குலதெய்வம் நம்மைக் காக்க நம் வீட்டிற்கு வருகிறது அல்லது நம் வீட்டில் குலதெய்வத்தின் சக்தி இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. குலதெய்வம் நம் வீட்டில் நிலைத்திருக்கிறது, அதன் சக்தி நம் வீட்டில் இருக்கிறது என்றால் குலதெய்வத்தின் அம்சமாக குழந்தைகளைக் காண்போம். பூஜையில் இருக்கும்போதோ அல்லது ஏதேனும் வேலை செய்துக்கொண்டிருக்கும்போதோ நம் வீட்டுக் குழந்தைகளைத் தவிர மற்ற வீட்டுக் குழந்தை செல்வங்கள் நம் வீட்டிற்குள் ஓடி வந்தாலோ அல்லது சிரித்துக்கொண்டே வந்தாலோ குலதெய்வம் நம் வீட்டிற்குள் வருகிறது என்று பொருள்.
2. வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை, அமாவாசை போன்ற நாட்களில் சிலர் குறி சொல்ல வருவார்கள். அப்படி வருபவர்களை குலதெய்வத்தின் சக்தியே மறு உருவமாக வந்து நமக்கு நடக்கவிருக்கும் நல்லது அல்லது கெட்டதை எச்சரிப்பதாக கருதப்படுகிறது.
3. கிராமங்களில் கோயிலுக்கு மாடு நேர்ந்து விடுவார்கள். அதுபோல் மாடு, பசு, கன்று, காகம், நாகம் இதுபோன்ற உயிரினங்கள் குலதெய்வத்தின் சக்தி பெற்றதாக கருதப்படுகிறது. காகம் வந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாம்பு அடிக்கடி கண்ணில் பட்டால், குலதெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி வைத்துவிட்டீர்கள். குலதெய்வம் கோயிலுக்குப் போக வேண்டும் என்று பொருள்.
4. அனைத்தையும் துறந்த துறவியை போன்று இருப்பவர்கள் நம் வீட்டிற்கு வந்து உணவு கேட்கும்போது, குலதெய்வமே நம் வீட்டிற்கு வருவதாகக் கருதப்படுகிறது.
5. நாம் செய்யும் தொழிலில் லாபமும், உயர்வும் ஏற்படுகிறது என்றால், குலதெய்வத்தின் ஆசி நமக்கு இருப்பதாகப் பொருள். பொன்னும், பொருளும், நகையும் ஆசைப்பட்டது போலவே வாங்குகிறீர்கள் என்றால், குலதெய்வத்தின் அருள் இல்லாமல் நடக்காது.
6. நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது வெள்ளை நிறத்தில் பசு, குழந்தை, சுமங்கலி பெண், முதியவர், வெள்ளை நிற தாமரை, குதிரை ஆகியவை கனவில் வந்தால் மகாலக்ஷ்மியின் அம்சமும், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் நிறைந்திருக்கிறது என்று பொருள்.
7. நம் வீட்டிற்கு அருகில் வில்வம், துளசி, நாகவல்லி மரம், வேப்பமரம் போன்ற மரங்கள் வளர்ந்து வந்தால், தெய்வத்தின் சக்தி அந்த வீட்டில் நிலைத்திருக்கிறது என்று அர்த்தம்.
8. குலதெய்வத்தின் அருள் நம் வீட்டில் இருக்கிறதென்றால், விபூதி, குங்குமம், பிரசாதம், சந்தனம், தாலி சரடு, மஞ்சள் போன்றவை நமக்குத் தேடி வரும். மற்றவர்கள் திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்குச் சென்று வந்து நமக்கு அந்த பிரசாதத்தை தருவார்கள். அவ்வாறு நடந்தால் நமக்கு குலதெய்வத்தின் அருள் இருப்பதால் மட்டுமே மற்ற தெய்வத்தின் ஆசி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.