சிறந்த யாகம் எது தெரியுமா?

சிறந்த யாகம் எது தெரியுமா?

காபாரதப் போர் முடிந்ததும் முடிசூடிய தருமர், தனது அரண்மனையில் அஸ்வமேத யாகம் செய்தார். ஊரெங்கும் கோலாகலம். அரண்மனையில் வருவோர் போவோருக்கெல்லாம் அறுசுவை உண்டி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் தானம் வழங்கிக் கொண்டிருந்தார் தருமர். அப்போது அங்கு வந்த அதிசயக் கீரிப்பிள்ளை ஒன்று யாகம் நடந்த இடத்துக்குக் சென்று, அந்த யாக சாம்பலில் உருண்டு புரண்டது. அதன் உடலில் பாதி பொன் நிறத்தில் மின்னியது. தருமர் உட்பட, அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் இதை ஆச்சரியமாகப் பார்க்க, அந்தக் கீரிப்பிள்ளை பேசத் தொடங்கியது.

“இங்கும் ஒன்றும் பிரயோசனமில்லை” என்று அலுத்துக்கொண்டது.

அதைக் கேட்ட தருமர், “கீரிப்பிள்ளையே நீ என்ன சொல்கிறாய்? எதைத் தேடி இங்கு வந்தாய்? அப்படி நீ தேடி வந்த எது கிடைக்கவில்லை?” என்று கேட்டார்.

அந்தக் கீரி மீண்டும் பேசத் தொடங்கியது, “இங்கு மாபெரும் அஸ்வமேத யாகம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டு வந்தேன். இதுவரை இந்த நாட்டில் நடந்த யாகங்களிலேயே இந்த யாகம் ஒருவேளை சிறப்பாக இருந்தால், என் பிரச்னை தீரும் என்று நம்பி வந்தேன். நான் நினைத்தது நடக்கவில்லை. முன்பொரு சமயம் ஏழை அந்தணர் குடும்பத்தினர் செய்த வேள்விக்கு இதுவரை எந்தவொரு வேள்வியும் ஈடாகவில்லை” என்று கீரி சொல்ல, தருமர் உள்ளிட்ட அவையில் இருந்தவர்கள் அனைவரும் திகைத்தனர்.

“அதிசயக் கீரியே, இந்த வேள்வியை விட சிறப்பாக ஓர் ஏழை அந்தணன் எவ்வாறு செய்திருக்க முடியும்? நீ என்ன பிதற்றுகிறாய்?” என்று ஒரு புரோகிதர் ஆவேசப்பட, அதை அவையினர் ஆமோதித்தனர்.

“அந்த அந்தணர் செய்த வேள்வி பற்றி முதலில் சொல்கிறேன். அதன் பிறகு நீங்கள் கருத்து கூறுங்கள்” என்று கூறிவிட்டு, விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்து அந்தக் கீரி.

“இதே அஸ்தினாபுரத்தில் சில காலம் முன்பு ஏழை அந்தணர் ஒருவர் தன் மனைவி, மகன், மருமகளுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவர் வீட்டருகே இருந்த அறுவடை வயலில் நான் திரிந்துகொண்டிருப்பேன். அந்த அந்தணர் தினமும் அறுவடை வயல்களில் சிந்திக் கிடக்கும் தானிய மணிகளைச் சேகரித்துச் செல்வார். அதை அவர் மனைவி சமைக்க, அந்த சொற்ப உணவை அந்த வீட்டிலிருந்த நால்வரும் பகிர்ந்து உண்பர். பாதி நாட்கள் அவர்கள் அரைப்பட்டினி, கால் பட்டினிதான்.

இந்த சமயத்தில் ஒரு நாள், சமைத்த சொற்ப உணவை அவர்கள் சாப்பிடத் தொடங்கும் சமயம் ஒரு வழிப்போக்கர் அவர்கள் குடிசைக்கு வந்தார். அவர், ‘எனக்கு தாங்க முடியாத பசி. சாப்பிட ஏதாவது தர முடியுமா?’ என்று அந்தணரிடம் கேட்டார். அந்தணர் அந்த வழிப்போக்கரை வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்து உபசரித்து, தனது பங்கு உணவை அளித்தார். ஆனால், வழிப்போக்கருக்கு அந்த உணவு போதவில்லை என்பது அவரது வாட்டமுற்ற முகத்திலேயே தெரிந்தது. அந்தணரின் மனைவி தனது பங்கு உணவையும் கொண்டு வந்து பரிமாறினாள். மேலும், அவரது மகனும் மருமகளும் கூட தங்களது பங்கு உணவை பரிமாற,  வழிப்போக்கர் வயிறார உண்டு மகிழ்வுடன் கிளம்பினார்.

அந்த வழிப்போக்கர் போகும்போது, “நீங்கள் பட்டினி கிடந்தாவது எனக்கு உணவிட்ட உங்களின் செய்கை, மற்ற வேள்விகள் அனைத்தையும்விடச் சிறப்பானது” என்று மனம்விட்டுப் பாராட்டிச் சென்றார்.

அடுத்த கணம், வானிலிருந்து ஒரு புஷ்பக விமானம் வந்து அந்தணரையும் அவர் குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றது. அவர்கள் சென்ற பிறகு வழிப்போக்கர் உணவருந்திய இடத்தில் சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கையில் நான் உருண்டு புரண்டேன். அப்போது எனது உடலில் அந்த உணவு பட்ட பகுதிகள் மட்டும் பொன்மயமாக மாறியது. எனது உடலில் சாதாரணத் தோற்றத்துடன் இருக்கும் மறுபாதியையும் பொன்மயமாக்க வேண்டும் என்பதற்காக எங்கெங்கு வேள்விகள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று புரண்டு பார்த்து வருகின்றேன். ஆனால், எனது உடலின் மறுபாதி பொன்மயமாக மாறவே இல்லை. இங்கே மாமன்னர் தருமர் நடத்தும் அஸ்வமேத யாகத்திலாவது எனது எண்ணம் நிறைவேறும் என்று நினைத்து வந்தேன். இங்கும் தோல்விதான். அந்த அந்தணரின் ஈகைக்கு ஈடாகவில்லை” என்று அலுத்துக்கொண்ட அந்தக் கீரி ஓடி மறைந்தது.

தன்னைவிட யாகத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்த தருமருக்கு, கீரியின் அந்தப் பேச்சு தலையில் அடித்தது போல் இருந்தது. தனது அகந்தையை அழிக்க இறைவனே கீரிப்பிள்ளை வடிவில் வந்ததாகக் கருதி, அது சென்ற திசையை நோக்கிக் கைகூப்பினார் தருமர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com