
வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர்கள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதின் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி, அதிர்ஷ்டம், மனதளவிலும் உடலளவிலும் சக்தி பெற்றவர்களாக திகழ்வார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் எழுவது நம்மை சுறுசுறுப்பாக இருக்க உதவும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம் வாழ்வில் நல்ல பலனைத் தரும். நம் முன்னோர்கள் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை 3 காலங்களாக பிரிக்கிறார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 'ருத்ர காலம்' என்று சொல்லப்படுகிறது. இரவு 9 மணி முதல் 12 மணி வரை 'ராட்சச காலம்' என்று சொல்லப்படுகிறது. இரவு 12 மணி முதல் 3 மணி வரை 'கந்தர்வக் காலம்' என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று காலங்களைத் தொடர்ந்து, காலை 3 மணி முதல் 6 மணி வரை உள்ள காலத்தை 'பிரம்ம முகூர்த்தம்' என்று சொல்கிறார்கள்.
இந்த காலத்தில் தான் உலகம் முழுவதும் உள்ள தீயசக்திகள் ஓய்வெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வேளையில் தெய்வீக சக்திகள் உயிரோட்டம் பெறும். இந்த நேரத்தில் நமக்கு நன்மை செய்யக்கூடிய தேவதைகள் பூமி முழுவதும் சுற்றி வரும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம்முடைய இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் இந்த நேரத்தில் தான் நமக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தயார் நிலையில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நம்முடைய மனம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நிலையாக இருக்கும். இந்த நிலை நாம் ஒரு விஷயத்தை யோசிப்பதற்கு உகந்த நேரமாக சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் நம்மை சுற்றியுள்ள நல்ல தேவதைகள் நம் மனதில் நல்ல சிந்தனையை உருவாக்க உதவுவார்கள். நாம் காலையில் 3 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் எழுந்திருக்கும் போது நம் மூளையில் உள்ள 'அஜனா' என்ற சக்கரமும் நம் கண்களில் உள்ள எனர்ஜி பாயின்டும் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் செய்து நம் ஆசைகளை சொல்லும் போது அது கட்டாயம் நிறைவேறும். நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறையான சிந்தனைகள் அந்த நேரத்தில் தவிர்க்கப்படும். வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும் நாம் செய்யும் செயலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால், அனைத்துமே நல்ல விதமாக வெற்றி பெறும்.