

நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு அர்ச்சகர் நம் கைகளில் பூவை கொடுப்பார். அந்த பூவை பெண்கள் தலையில் வைத்துக் கொள்வார்கள். பொதுவாக கோவில்களில் வழங்கப்படும் பூக்கள் மற்றும் பிரசாதங்கள் அனைத்துமே நிர்மால்யம் என அழைக்கப்படுகிறது. எப்போதும் நாம் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்த பின்னர் அர்ச்சகர் நமது கைகளில் கொடுக்கும் மலர்கள் மற்றும் பிரசாதங்கள் அனைத்தும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை முதலில் உணர வேண்டும்.
அந்த வகையில், நாம் கோவிலுக்கும் சென்று இறைவனை வழிபடும் போது அங்கு நமக்கு கிடைக்கும் மலர்கள், நீங்கள் பூஜிக்கும் கடவுளைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களையும் பலன்களையும் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு கடவுளுக்கு பிரியமானதாக கருதப்படுகிறது.
இந்த மலர்கள் இல்லாமல் செய்யப்படும் பூஜைகள் முழுமையடையாது. அதேசமயம், பக்தர்கள் பக்தியுடன் எதைக் கொடுத்தாலும், அதைக் கடவுள் ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம். கடவுள் வழிபாட்டில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல் இறைவனுக்கு உகந்த அந்த மலர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பூஜைகள் குறிப்பிட்ட பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் கோவிலில் வழிபாடு செய்யும் போது உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு மலர் கிடைத்தால் அது உங்களுக்குக் குறிப்பிட்ட கடவுளின் ஆசீர்வாதம் அல்லது குறிப்பிட்ட பலனின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
* கோவிலில் உங்களுக்கு சிவப்பு ரோஜா கிடைத்தால் துர்க்கையின் அருளால் நீண்ட நாள் இருந்த பகைமை விலகும் என்று அர்த்தம்.
* அதேபோல் மஞ்சள் சாமந்தி கிடைத்தால் உங்களுக்கு விநாயகரின் அருள் பரிபூரணமாக உள்ளது என்றும் அவரின் அருளால் காரியத்தடைகள் நீங்கி செல்வம் சேரும். செழிப்பு மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி ஆசீர்வாதங்களை பெறலாம் என்று அர்த்தம்.
* அன்னை காளிக்கு மிகவும் பிடித்தமான செம்பருத்தி மலர் உங்களுக்கு கிடைத்தால் கெட்ட சக்திகளை நீக்கி பாதுகாப்பு, வலிமை போன்றவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
* ரோஜாக பூ கிடைத்தால் கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களை பெறலாம் என்று நம்பப்படுகிறது.
* வெள்ளை ரோஜா கிடைத்தால் சிவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது என்றும் அவரின் அருளால் மனதில் தெளிவு மற்றும் நல்லூறவு உண்டாகும் என்று பொருள்படும்.
* மஞ்சள் ரோஜா கிடைத்தால் உங்களுக்கு சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் உள்ளது என்றும் அவளருளால் அறிவும், புதிய தொடக்கங்களும் சுபமாக அமையும் என்று பொருள்படும்.
* துளசியில் விஷ்ணு வாசம் செய்வதாக அர்த்தம். அந்த வகையில் உங்களுக்கு கோவிலில் துளசி கிடைத்தால் விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை கிட்டும்.
* சம்பங்கி பூ வந்தால் உங்களுக்கு முருகனின் பரிபூரண அருள் உள்ளது என்பதை குறிக்கிறது. முருகனின் அருளால் நற்காரியங்கள் நடக்கும். இனிய திருமண வாழ்க்கை அமையும் என்று பொருள்படும்.
* விஷ்ணு பகவானுக்கு தாமரை மலர் மிகவும் பிடிக்கும். கோவிலில் நாம் வழிபாடு செய்து முடித்த பின்னர் நமக்கு தாமரை கிடைத்தால் விஷ்ணு பகவான் இந்த மலர்கள் மூலம் ஆசீர்வாதங்கள் வழங்குவார் என்று அர்த்தம்.