சாமி கும்பிடும்போது சிலருக்குக் கொட்டாவி வருவதையும், கண்ணீர் வருவதையும் பார்த்திருப்போம். சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற விஷயங்களும் நடைபெறும். இதற்கான பலன்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம், நம் குறைகளை கடவுளிடம் சொல்லவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கான பரிகாரத்தைச் செய்யவுமே செல்வோம். இன்னும் சிலர் மனநிம்மதி தேடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. அவ்வாறு கோயிலில் இறைவனை வழிபடும்போது சிலருக்குக் கண்ணீர் வந்துவிடும். இதற்கான காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், இறைவனுக்கும் உங்களுக்கும் ஒரு ஆழமான பிணைப்பு இருந்தாலும், இறைவனுக்கும் உங்களுக்கும் ஒரு உன்னதமான உறவிருந்தால் மட்டுமே கண்களில் இருந்து கண்ணீர் வரும் என்று சொல்லப்படுகிறது.
சிலருக்கு இறை வழிபாடு செய்யும்போது கொட்டாவி வரும். இதற்கான காரணம், பொதுவாக கொட்டாவி வருவதற்கான காரணம் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காதபோது அது கொட்டாவி மூலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், இரவில் சரியான தூக்கமின்மை காரணமாக காலையில் அடிக்கடி கொட்டாவி ஏற்படுகிறது என்று சொல்லப்படுவது அறிவியல் காரணங்கள் ஆகும்.
சிலருக்கு இறைவழிபாட்டின்போது கொட்டாவி வருவது, எதிர்மறையான அறிகுறியாகும். உடலில் உள்ள எதிர்மறையான விஷயம் கொட்டாவி மூலம் வெளிப்படுவதாக சொல்லப்படுகிறது. உடலில் நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருந்தாலும் கொட்டாவி வரும்.
சில சமயங்களில் நாம் மனமுருகி வேண்டும்போது கடவுள் சிலை மீதிருந்து பூக்கள் விழும். இதற்கு சிலர் சொல்வது என்னவென்றால், நாம் வேண்டுவது உடனே நிறைவேறும் என்று நம்புகிறார்கள். சாமி சிலையின் வலது பக்கத்தில் இருக்கும் பூ கீழே விழுந்தால், நாம் வேண்டிக்கொண்டது சீக்கிரமே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல், சாமியின் இடது பக்கத்தில் இருக்கும் பூ விழுந்தால், நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். ஆனால், கால தாமதம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுவே சாமிக்கு நேரே இருக்கும் பூ கீழே விழுந்தால், நம்முடைய முயற்சி அதிகமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
கோயிலில் இறைவழிபாடு செய்யும்போது மணி ஓசைக் கேட்டால், சில நேரங்களில் சரியாக நம் வேண்டுதலை கடவுளிடம் சொல்லும்போது மணி ஓசைக் கேட்கும். அவ்வாறு நிகழ்ந்தால் நம் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொண்டார். அதற்கான அறிகுறியாகவே மணி ஓசை கேட்கிறது என்றும் நம்பப்படுகிறது.