நம்மைச் சுற்றி வாழும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் நமக்கு நிகழவிருக்கும் நன்மை மற்றும் தீமைகளை உணர்த்துவதையே நாம் சகுனம் என்கிறோம். நம் வீட்டில் இருக்கும் பல்லி சில சமயங்களில் நம் மீது விழுந்துவிடும். அவ்வாறு பல்லி நம் மீது விழுந்தால், என்ன பலன் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பல்லி நவகிரகங்களில் ‘ஞானகாரகன்’ என்று அழைக்கப்படும் கேது பகவானைக் குறிக்கிறது. பல்லி நம் தலையில் விழுவது கெட்ட சகுனத்தை சொல்கிறது. மற்றவர்களுடன் சண்டை, உறவினர்களின் மரணம், மனதில் குழப்பம் ஆகியவற்றையும் இது குறிக்கிறது. இதுவே நெற்றியின் இடதுப் பக்கத்தில் விழுந்தால், புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும். வலது பக்கத்தில் விழுந்தால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்று பொருள். முகத்தில் பல்லி விழுந்தால், வீட்டிற்கு உறவினர்கள் வரவிருப்பதைக் குறிக்கும். புருவத்தில் பல்லி விழுந்தால், அரசாங்க பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.
இடதுக்கண் பக்கம் விழுந்தால், சுகம் மற்றும் வலதுக்கண் பக்கம் விழுந்தால், தண்டனை கிடைக்கும். பல்லி மூக்கின் மீது விழுந்தால் நோய் ஏற்படும், பிரச்னை உண்டாகும். இதுவே பல்லி வலது காதின் மீது விழுந்தால் நல்ல ஆயுளும், இடது காதின் மீது விழுந்தால் வியாபார உயர்வும் கிடைக்கும். கழுத்தின் இடதுப்பக்கம் பல்லி விழுந்தால் காரிய வெற்றியும், வலதுப்பக்கம் விழுந்தால் பகையும் உண்டாகும்.
பல்லி இடது மார்பில் விழுந்தால் சுகம் ஏற்படும். இதுவே வலது மார்பில் விழுந்தால் லாபம் உண்டாகும். வயிற்றுப் பகுதியில் விழுந்தால் தானிய லாபம் ஏற்படும். தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்புள்ள தங்க, வைர நகைகள் வாங்கும் யோகம் உண்டு. தோளின் இடதுப்பக்கம் விழுந்தால், சுகபோகம் ஏற்படும். இதுவே, பல்லி வலதுப்பக்க தோளின் மீது விழுந்தால், வெற்றி உண்டாகும். இடதுக்கை மணிக்கட்டில் விழுந்தால் நல்ல செய்தி வரும். வலதுக்கை மணிக்கட்டில் விழுந்தால் உடல்நலம் பாதிக்கபடும்.
முதுகுப்பகுதியில் பல்லி விழுந்தால் கவலை, துன்பம் ஏற்படும். தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், வீட்டில் உள்ள பெற்றோர்கள் அல்லது வயதானவர்களுக்கு தீங்கு ஏற்படப் போவதாகப் பொருள். முழங்கால் இடதுப்பகுதியில் விழுந்தால் சுகம். வலதுப்பகுதியில் விழுந்தால் பிரயாணம் ஏற்படும். பாதத்தின் வலதுப்பகுதியில் பல்லி விழுந்தால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இடதுப்பக்கத்தில் விழுந்தால் துக்கம் என்று பொருள். இதுபோல, பல்லி விழும் உடல் பாகத்தை வைத்து பலன்களைக் கணித்து அதற்கு ஏற்றாற்போல வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருந்துக்கொள்வது சிறப்பாகும்.