நாம் வீட்டில் மாட்டியிருக்கும் காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு குறிப்புகள் மூலம் அம்பு குறியீடு இருக்கும். இந்த அம்பு குறியீடு எதற்கு என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் குறியீடு மேல் நோக்கி இருந்தால் மேல்நோக்கு நாள் என்றும், கீழ் நோக்கு இருந்தால் கீழ்நோக்கு நாள் என்றும், இருபுறமும் சமமாக இருந்தால், சமநோக்கு நாள் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குறியீடு அந்தந்த நட்சத்திரத்திங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தக் குறியீடு பற்றி தெரிந்துகொண்டு சில காரியங்களை செய்யும்போது அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும். இனி, இம்மூன்று நாட்களின் குறியீடுகள் பற்றி பார்ப்போம்.
மேல்நோக்கு நாள்: இது உத்திரம், உத்திராடம், ரோஹிணி, திருவாதிரை, பூசம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, திருவோணம் போன்ற ஒன்பது நட்சத்திரங்கள் கொண்ட நாட்களை குறிக்கிறது. பொதுவாக, சுப காரியங்கள் செய்ய மேல்நோக்கு நாட்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல அதிர்ஷ்டமான நாளாக அமையும். இந்நாட்களில் நல்ல விஷயங்களை செய்வது மிகவும் நல்லது. மேலும், வளர வேண்டிய நல்ல விஷயங்களை இன்று செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
கீழ்நோக்கு நாள்: இந்நாட்களில் கீழ்நோக்கி நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை செய்யலாம். கிருத்திகை, பரணி, ஆயில்யம், விசாகம், பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், மூலம் போன்ற ஒன்பது நட்சத்திரங்களை இந்நாள் குறிக்கிறது. கீழ்நோக்கு நாட்கள் மண்ணிற்கு அடியில் செய்யக்கூடிய விஷயங்களை செய்வதன் மூலம் தடைவில்லாத நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
சமநோக்கு நாள்: இதில் மிருகசீரிஷம், அஸ்தம், அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், சித்திரை, ரேவதி, கேட்டை, அனுஷம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்டது. இதில் சமமாகச் செய்யக்கூடிய சில விஷயங்களை செய்வதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். விவசாய நிலத்தில் உழவு செய்வது போன்ற விஷயங்களை இந்நாட்களில் செய்தால் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
உண்மையில் நாளும் கோளும் நமக்கு நன்மைகளை அதிகமாகச் செய்யும் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இந்த நாட்களை மனதில் நிறுத்து செயல்களை செய்யும் போது அதற்குரிய பலன்களைப் பெறலாம். இந்த நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு நன்மைகள் பெறுவோம்.