1. அஸ்வினி நட்சத்திரத்தில் சூரிய பகவானை வணங்கிவிட்டு தன்னைவிட உயர்ந்த பதவியில் உள்ள உயரதிகாரிகளை சந்தித்தால் நாம் செல்லும் காரியம் மிகவும் சுலபமாக முடியும்.
2. மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சிவபெருமானை வணங்கி விட்டு, வாகனங்கள் வாங்கினால் அது விருத்தியாகும். அதனால் நன்மை உண்டாகும். மாடு, குதிரை போன்ற கால்நடைகளை வாங்குவதற்கும் இது சிறந்த நட்சத்திரமாகும்.
3. அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு, பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனே நிச்சயமாகும். தங்கம் வாங்குவதற்கும் இது உகந்த நட்சத்திரம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கிவிட்டு சத்தியபாமாவை பெண் பார்க்கச் சென்றாராம். இதனாலேயே சத்தியபாமாவை தடங்கள் இன்றி மணந்தாராம்.
4. அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்து விட்டு, இரும்பு சம்பந்தப்பட்ட இயந்திரங்கள், தளவாடங்கள், அச்சு இயந்திரங்கள் முதலியவற்றை வாங்கினால், அவை பல்கிப் பெருகி தொழிலை நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி விட்டு, வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம். நிலம் போன்றவை வாங்குவதற்கும் இந்த விதி பொருந்தும்.
6. அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கி விட்டு, வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது. விபத்துக்கள் ஏற்பட்டாலும் கூட அவற்றில் இருந்து காயம் இன்றி தப்பலாம்.
7. பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும். அறுவை சிகிச்சை செய்வதற்கும், டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும்.
8. புனர்பூசம் நட்சத்திரத்தில் மருத்துவர்கள் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால், கைராசி மருத்துவர் என்ற பெயரை எளிதில் பெற்று விடலாம். உங்களைத் தேடி வரும் நோயாளிகள் பூரண குணமடைந்து உங்களை மனதாரப் புகழ்வர். உங்களது அறுவை சிகிச்சைகள் வெற்றியைத் பெறும். அதேபோல், மாணவர்கள் ஒவ்வொரு புனர்பூசம் நட்சத்திரத்திலும் பெருமாளை வணங்கி, அர்ச்சனை செய்து வந்தால் படிப்பறிவு வேகமாக வளரும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். வேலைக்கான தேர்வு எழுதுபவர்கள் இவ்வாறு செய்து வந்தால் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.
மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் மூல நட்சத்திரம் உத்தமமான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கி விட்டு மேற்கொள்ளும் எந்தப் பயணமும் வெற்றியைத் தரும்.