ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி எப்போது தெரியுமா?

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி எப்போது தெரியுமா?

நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி ஆகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி என பல பெயர்களில் இந்தத் திருநாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம். ஸ்ரீகிருஷ்ணர் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி அன்று ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இந்த வருடம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதம் 6ம் தேதி அனுசரிக்கப்படுமா அல்லது 7ம் தேதியா? என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிறது. காரணம், இந்த வருடம் ஜன்மாஷ்டமிக்கான ரோஹிணி நட்சத்திரம் செப்டம்பர் 6ம் தேதி காலை 9.20 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 7ம் தேதி காலை 10.25 மணி வரை தொடர்கிறது.ரோஹிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் செப்டம்பர் 6ம் தேதி இரவில் விழுவதால் அதே நாளில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்படும். அந்த வகையில், 2023ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்றுதான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, அஷ்டமி திதியன்று எந்தப் புதிய செயல்கள் அல்லது நல்ல விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. ஸ்ரீகிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகுதான் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கான பூஜை பெரும்பாலும் துவங்கும். குழந்தை கிருஷ்ணர் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து அவருக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் குழந்தை ஸ்ரீகிருஷ்ணரின் காலடித்தடங்கள் வீட்டின் வாயில் முதல் பூஜையறை வரை வரையப்படும்.

இன்று ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்டவை சமைக்கப்பட்டு அவருக்கு பிரசாதமாக வைத்து பூஜை செய்யப்படும். ஒருசில வீட்டில், தொட்டிலில் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் பொம்மையை வணங்கி வழிபடுவதும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, மாலை ஆறு மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com