நிம்மதியான தூக்கம் எப்போது வரும் தெரியுமா?

Do you know when restful sleep will come?
Do you know when restful sleep will come?https://tamilandvedas.com
Published on

ரு  ஊருக்கு  முனிவர் ஒருவர் வந்திருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், அவரிடம் வந்து, “சுவாமி, நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். வீட்டில் பல பிரச்னைகள், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் எல்லா இடத்திலும் எனக்குப் பிரச்னைகள்தான். படுத்தால் என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட அந்த முனிவர், “மாலையில் வா...” என்றார்.

அவனும் மீண்டும் மாலையில் வந்து முனிவரின் முன்பு நின்றான்.

அவனைக் கண்ட முனிவர், "அதோ அந்தத் தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நூறு ஒட்டகங்கள் என்ன செய்கின்றன என பார்த்து விட்டு வா" என்றார்.

தோட்டத்துக்குச் சென்றவன் திரும்பி வந்து, “நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றாள்.

"சரி... நல்லது. அனைத்து ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கி விட்டு காலையில் மீண்டும் வா” என்றார்.

“சரி சுவாமி” என்று தோட்டத்திற்குப் போனவன், மறுநாள் காலையில் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் முனிவரிடம் வந்தான்.

வந்தவன், '‘சுவாமி, இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை” என்றான்.

"ஏன்? என்னாச்சு?” என்றார் முனிவர்.

"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்தன. சில ஒட்டகங்களை நான் கஷ்டப்பட்டு படுக்க வைத்தேன். ஆனால், நூறு ஒட்டகங்களையும் என்னால் படுக்க வைக்கவே முடியவில்லை. அதனால் நான் இரவு முழுவதும் தூங்கவே  இல்லை” என்றான்.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், உடலுக்கு சுகத்தையும் தரும் பெருங்காயம்!
Do you know when restful sleep will come?

முனிவர் சிரித்தபடியே, “இதுதான் வாழ்க்கை... வாழ்க்கையில் பிரச்னையை முடிப்பது என்பது நூறு ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்னைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம். ஆனால், சில பிரச்னைகள் முடிந்தால் வேறு சில பிரச்னைகள் புதிதாக  வந்து கொண்டுதான் இருக்கும். அனைத்து பிரச்னைகள் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகில் யாராலும் தூங்கவே முடியாது. பிரச்னைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுகொண்டே இருக்காதே. தீர்க்க முடிந்தவற்றை தீர்த்து விட்டு மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருந்தால் தூக்கம் தானாக வரும்” என்றார்.

வாழ்வில் பிரச்னைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது. அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவு! ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது. அதுபோல், நமக்கான பிரச்னைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு வாழ்வை அமைதியாக அனுபவியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com