முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. நம் மனதில் நினைத்ததை அப்படியே நடத்திக் கொடுக்கக் கூடியவர்தான் சித்தி விநாயகர். ஆந்திர மாநிலம், காணிப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில். இக்கோயிலை சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் 11ம் நூற்றாண்டில் கட்டினார். பிறகு விஜயநகர பேரரசு இக்கோயிலை விரிவுப்படுத்தியது.
முன்பொரு காலத்தில் மூன்று சகோதரர்கள் இவ்விடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் உடல் ஊனமுற்றவராக இருந்தனர். ஒருவருக்குக் கண் தெரியாது, இன்னொருவருக்கு காது கேட்காது, மூன்றாமவருக்கு வாய் பேச முடியாது. ஒருநாள் இவர்கள் மூவரும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றை தோண்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கிணற்றை தோண்டிக்கொண்டிருக்கும் போது கையிலிருந்த பொருள் கிணற்றுக்குள்ளே விழுந்து ஏதோ ஒரு கணமான பொருள் மீது பட்டு விழுவது போல சத்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் கிணற்றை ஆழமாகத் தோண்ட முயற்சிக்க, கிணற்றிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. இதில் அந்த மூன்று சகோதரர்களின் ஊனமும் குணமாகிறது. ஊர் மக்கள் அந்த அதிசய நிகழ்வை கேள்விப்பட்டு கிணற்றை வந்து பார்த்தபோது அங்கே விநாயகரின் சிலை இருந்ததைக் கண்டனர். அந்த சிலையை தோண்டி எடுக்க முயற்சிக்க அதன் அடிப்பகுதி தட்டுப்படவில்லை. எனவே, இன்றைக்கும் அந்தக் கிணறு நிறைய தண்ணீரிலேயே விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இந்த விநாயகர் சுயம்புவாக உருவானவர் என்று கூறுகிறார்கள். கிணறு முழுக்க தண்ணீர் நிரம்பிய நிலையிலேயேதான் இவர் காட்சியளிக்கிறார்.
ஊர் மக்கள் தேங்காய் போன்ற காணிக்கைகளை சுயம்புவாக தோன்றிய இந்த விநாயகருக்கு படைத்தனர். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர் தேங்காய் நீரை ஒன்றரை ஏக்கருக்கு ஓடையாகப் பாயச் செய்தார். இதுவே கணிப்பாகம் என்பதன் பொருளாக அமைந்தது. ‘கணி’ என்றால் ஈரநிலம். ‘பாகம்’ என்றால் தண்ணீர் ஈர நிலத்தில் ஓடுவதைக் குறிக்கிறது.
இன்றைக்கும் இந்த விநாயகர் அந்தக் கிணற்று தண்ணீரிலேயேதான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். அந்தக் கிணற்று நீர் வற்றாது இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் கிணற்றிலிருந்து வழிந்தோடும்போது அதை தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
இந்தக் கோயிலில் இருக்கும் விநாயகர் சிலையானது சில சென்டி மீட்டர் அளவு வளர்கிறது என்று கூறுகிறார்கள். தற்போது வயிறு மற்றும் முட்டி பகுதிகள் மட்டுமே தெரிகிறது. 50 வருடத்திற்கு முன்பு பக்தர் ஒருவரால் விநாயகருக்கு வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் தற்போது அவருக்கு அளவு போதவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
சுயம்புவாக உருவாகிய இந்த சித்தி விநாயகர் நியாயமாக தீர்ப்பு வழங்குவதற்கும் பிரசித்தி பெற்றவர். பிரச்னையிருக்கும் இருவரும் இக்கோயிலுக்குச் சென்று அங்கேயிருக்கும் கிணற்றில் மூழ்கி எழுந்து வந்ததும் தவறு செய்தவர் தனது குற்றத்தை தானாகவே ஒப்புக்கொள்வாராம். இன்னும் சிலர் கோயிலுக்குள் நுழைந்ததுமே தவறை ஒப்புக்கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் விநாயர் சதுர்த்திய திருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.