இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உள்ள கலாசார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடனும் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர்.
அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை மகாவிஷ்ணு தனது வாகனமாக ஏற்றுக்கொண்டு அவரின் மீது பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்தக் கதையை நினைவு கூறும் வகையில்தான் பாலியில் பிரம்மாண்டமான கருடன் மீது மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற இந்த பிரம்மாண்ட சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 46 மீட்டர் உயரம் கொண்ட பீடத்துடன் அமைந்த அந்த சிலையின் மொத்த உயரம் 122 மீட்டர். அதாவது, 400 அடி ஆகும். இந்தோனேசியாவின் மிக உயரமான சிலையாக இது திகழ்கிறது.
2018ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி கட்டி முடிக்கப்பட்டு அதே வருடம் செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போது இந்தோனேசிய ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த சிலை அமைப்பதற்கான முதல் கட்ட பணி தொடங்கப்பட்டது 1990ம் ஆண்டில் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். 1990களில் இந்தோனேசிய சுற்றுலா அமைச்சராக இருந்தவர் மற்றும் பல அமைச்சர்கள் ஆகியோரின் தலைமையின் கீழ் நியோமன் நுவர்டா என்பவரால் இந்த சிலைக்கான உருவம் வரையப்பட்டது.
இந்த சிலையை அமைப்பதற்கான கட்டுமான அடிக்கல் நாட்டு விழா 1997ம் ஆண்டு நடைபெற்றது. ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக இந்தத் திட்டம் அப்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டு மீண்டும் இந்த சிலை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 2018ல் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை அமைப்பதற்கான கற்கள் கிரேன்களில் அதிகபட்ச சுமையை தாங்கும் வகையில் 1500 சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னர் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிலையானது 21 அடுக்குமாடி கட்டடத்தின் உயரத்திற்கு ஒப்பானது. இந்த சிலையில் கான்கிரீட் கலவை, செம்பு, பித்தளை, துருப்பிடிக்காத எஃகு சட்டம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட சுமார் முப்பது மீட்டர் (98 அடி) கூடுதலாகக் கொண்டதாகும். இந்தச் சிலையை அமைக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருக்கிறது. அதாவது இந்திய மதிப்புப்படி சுமார் 827 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.