இந்தியாவில் உள்ள இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதில் வரும் பாண்டவர்களை கதையின் கதாநாயகர்களாகவும், கௌரவர்களை எதிரிகளாகவும் சித்தரித்திருப்பார்கள். துரியோதனன் கதாபாத்திரத்தை பலருக்குப் பிடிக்காது என்றாலும், அப்பேற்பட்ட துரியோதனனுக்கு எப்படி கோயில் ஒன்று எழுப்பப்பட்டது என்பதைப் பற்றி இந்த பதிவில் அறிவோம்.
பெருவிருத்தி மலைநாடா அல்லது மலைநாடா என்பதே துரியோதனனுக்காக தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் உள்ள சங்கல்ப மூர்த்தி துரியோதனன் ஆவான். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பொருவழி கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இங்கே துரியோதனனுக்கு என்று சிலை ஏதும் இல்லை. இக்கோயிலில் மண்டபம் என்னும் நடைமேடையே உள்ளது. பக்தர்கள் இக்கோயிலில் தியானம் செய்வார்கள். சில நேரங்களில் பக்தர்கள் மண்டபத்தின் மீது நின்றும் வேண்டிக்கொள்வார்கள். இக்கோயிலில் ஆச்சர்யப்படும் வகையில் கர்ணன், சகுனி, துச்சலா, துரோணர், பீஷ்மர் ஆகியோரையும் வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துரியோதனன், வனவாசம் சென்ற பாண்டவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுது மிகவும் களைத்து தண்ணீர் தாகத்துடன் அமர்ந்திருந்தான். அங்கேயிருந்த வயதான பாட்டி ஒருவர் துரியோதனனின் பசியையும், தாகத்தையும் போக்கினார். பின்பு துரியோதன் அரசன் என்பதை அறிந்த அந்த மக்கள், துரியோதனன் தங்களிடம் உணவு வாங்கி அருந்தியதில் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்த மக்களின் விருந்தோம்பலை பார்த்த துரியோதனன் அவர்கள் நலத்திற்காக சிவபெருமானை வேண்டிக்கொண்டார். அம்மக்களுக்கு அதன் பிறகு பெரிய நிலப்பரப்பை விவசாயம் செய்வதற்காக தானமாகக் கொடுத்தான். இதனால் துரியோதனனுக்கு இவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டு அவனையே கடவுளாகவும் இம்மக்கள் வழிபடத் தொடங்கிவிட்டனர். இன்றும் குறவர் சமூகமே துரியோதனன் கோயில் பூசாரியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் சொர்ணக்கொடி, அதாவது தங்கத்தினால் ஆனக்கொடி உள்ளது. இது மன்னனின் அதிகாரத்தையும், சக்தியையும் காட்டுவதாக நம்பப்படுகிறது. ‘மலக்குடா மகோல்சவம்’ என்ற திருவிழாவின்போது, அந்தக் கொடியைப் பார்க்கலாம். இத்திருவிழாவில் 70 முதல் 80 அடி உயரத்தில் எருது, குதிரை போன்ற சிலைகளைக் காண இயலும். இதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துரியோதனனிடம் பல சிறந்த குணங்கள் இருந்தன. கருணை, இரக்கம், ஜாதி மத பேதமின்றி பழகுதல், நட்புக்கு மரியாதை போன்ற குணங்களை கண்டதாலோ என்னவோ, துரியோதனனுக்கு இங்குள்ள மக்கள் மிகவும் பிரியத்துடன் அவரையே கடவுளாக நினைத்து கோயில் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இக்கோயிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து விட்டு வருவது சிறந்ததாகும்.