மணாலிக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம்தான் ஹிடிம்பா தேவி கோயில். இக்கோயில் மணாலியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலர் இக்கோயிலுக்கு இயற்கை அழகை ரசித்துக்கொண்டே நடந்து செல்ல விரும்புகிறார்கள். காடுகளின் கடவுள் என்று அழைக்கப்படும் ஹிடிம்பா தேவியை வணங்க எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.
இந்த இடம் வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமாக இருப்பதால் யாக் என்னும் எருதின் மீது இங்கே வரும் சுற்றுலா பயணிகள் சவாரி செய்யலாம். இந்தக் கோயிலை தரிசிக்க வரவேண்டிய சரியான காலம், செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆகும். குளிர்காலத்தில் மணாலியில் பனிப்பொழிவு ஏற்பட்டு இக்கோயிலை காண மிக அழகாக இருக்கும். இக்கோயிலில் காட்டப்படும் ஆரத்தி தீபத்தை அவசியம் தவற விடாமல் தரிசிக்க வேண்டும்.
இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் அமைந்துள்ள இக்கோயில்தான், ஹிடிம்பா தேவி கோயிலாகும். இது மிகவும் பழைமையான குகைக் கோயிலாகும். பீமனின் மனைவியான ஹிடிம்பிக்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹிமாலயத்தின் மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்கு நடுவிலே அமைந்துள்ளது. மஹாராஜ பஹதூர் சிங் 1553ல் இக்கோயிலை வடிவமைத்தார். ஹிடிம்பா தேவி கோயில் 24 மீட்டர் உயரமாகும்.
ஹிடிம்பி அவளுடைய சகோதரன் ஹிடிம்பனுடன் இந்த அடர்ந்த காட்டிலே வாழ்ந்து வந்தாள். அசுரக் குடும்பத்தில் பிறந்த ஹிடிம்பி யார் தன்னுடைய சகோதரனான ஹிடிம்பனுடன் சண்டையிட்டு அவனைத் தோற்கடிக்கிறாரோ அவரையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி எடுத்திருந்தாள். பாண்டவர்களின் வனவாசத்தின்போது மணாலி வந்திருந்த நேரம் பீமனும் ஹிடிம்பனுடன் சண்டையிட்டு அவனை வென்று ஹிடிம்பியை திருமணம் செய்து கொள்வார். இவர்களுக்குப் பிறந்த குழந்தையே கடோத்கஜன் ஆவான்.
பிறகு பாண்டவர்கள் வனவாசம் முடித்து நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, ஹிடிம்பா தேவி அவர்களோடு செல்லவில்லை. இங்கேயே இருந்து தவம் புரிந்து இறை நிலையை அடைந்தார் என்று கூறப்படுகிறது. நவராத்திரியின்போது மணாலியில் ஹிடிம்பி கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் உள்ள பெரிய கல் ஒன்று இருக்கிறது. இங்கேயிருக்கும் 3 அங்குல பித்தளை சிலை ஹிடிம்பா தேவியின் சிலையாகும். இக்கோயிலில் இருந்து 70 மீட்டர் தொலைவில் கடோத்கஜனுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஹிடிம்பா தேவியின் பாதம் பொறிக்கப்பட்ட கல்லையே இக்கோயிலில் வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிடிம்பா தேவி கோயில் நிறைய திரைப்படங்களிலும் காட்டப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ரோஜா, சக்தி, ஹே ஜவானி ஹை திவானி போன்ற படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் ஒருசேர இருக்கும் என்பதால் இக்கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று ஹிடிம்பா தேவியை தரிசிக்க வேண்டியது அவசியமாகும்.