சனி பகவான் யானை மீது அமர்ந்து அருளும் திருக்கோயில் எங்குள்ளது தெரியுமா?

sani bhagavan
sani bhagavanhttps://www.pinterest.com

நீதி தேவனாகக் கருதப்படும் சனி பகவானைக் கண்டால் பலருக்கும் அச்சம் வருவது இயல்புதான். அவரது அருளைப் பெற சில சிறப்புக் கோயில்களும் நாடு முழுவதும் உள்ளன. கிரகங்களில் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். பெரும்பாலான கோயில்களில் சனி பகவான் காக வாகனத்தின் மீது அமர்ந்திருப்பதையே பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவில் அமைந்துள்ள ஒரு சனி பகவானின் கோயிலில் அவர் யானை மீது அமர்ந்திருப்பதாகவும் அந்த அவதாரத்தை தரிசித்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அன்னபூர்ணா பகுதியில் அமைந்துள்ள சனி பகவான் கோயில் முன்னூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சென்று வந்தாலே பக்தர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு அருளும் சனி பகவான் யானை மீது அமர்ந்திருக்கும் திருக்கோலம்தான். இந்த உருவத்தில் அவரை தரிசிக்கும்போதும் உங்கள் கோபம் குறைந்து, மன அமைதி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், சனி பகவான் யானையின் மீது வருவது போன்ற தோற்றத்தில் இருப்பதால் செல்வச் செழிப்பு உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.

கரிய நிறம் கொண்ட சனி பகவான் காசிப  கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரத்தில் இவர் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில் இருப்பவர். சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான்.

இதையும் படியுங்கள்:
கொடிய நோய்களைத் தடுக்கும் கடுகு எண்ணெய்!
sani bhagavan

300 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சனி பகவானுக்காக கோபால்தாஸ் திவாரி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். ஒரு சமயம் திவாரியின் கனவில் தோன்றிய சனி பகவான் தமது சிலையை கண்டுபிடிக்க மலையில் தோண்டச் சொன்னாராம். திவாரியோ, சனி பகவானிடம் ‘எனக்குக் கண் தெரியாது. நான் எப்படி தோண்ட முடியும்’ எனக் கேட்டாராம். சனி பகவான் திவாரியின் கண்களைத் திறக்கச் சொன்னாராம். அப்போது அவருக்குக் கண் பார்வை கிடைத்ததாம்.

இந்த அதிசயத்திற்குப் பிறகு திவாரி, சனி பகவானின் தீவிர பக்தராகவே மாறி இருக்கிறார். சனி பகவான் சொன்னபடி மலையின் அடியில் சனி பகவானின் சிலையையும் கண்டாராம். அன்றிலிருந்து இந்தக் கோயில் மிகவும் பிரபலமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com