வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு போட்ட துவாரம் உள்ள கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

Paathaleswarar temple
Paathaleswarar templeImage Credits: Maalaimalar

திருவாரூர் மாவட்டம், ஹரித்துவாரமங்கலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில். இந்தத் திருத்தலத்தை தரிசித்தால் வடக்கே உள்ள ஹரித்துவாரை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நவக்கிரக தோஷம் விலகவும், எதிரிகளால் உண்டாகும் பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை சரியாகவும், படிக்கும் மாணவர்கள் இங்கே வந்து ஈசனை வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஒருசமயம் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அதனால் சிவபெருமான் அவர்களிடம், ‘யார் முதலில் என் தலைமுடியையும், பாதத்தையும் பார்க்கிறார்களோ அவர்களே பெரியவர்’ என்ற நிபந்தனையோடு போட்டி ஒன்றை வைத்தார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவனின் ஜடாமுடியை தேடிச் செல்கிறார். விஷ்ணுவோ, வராக அவதாரம் எடுத்து சிவனின் பாதத்தை தேடிப்போகிறார். இப்படி இருவரும் தேடிச்செல்லும்போது, பிரம்மா சிவனின் ஜடாமுடியிலிருந்து விழுந்த தாழம்பூவை பார்த்துவிட்டு, சிவனின் தலைமுடியை பார்த்ததாத அவரிடம் பொய் கூறுகிறார். அதற்கு தாழம்பூவும் சாட்சி சொல்கிறது.

இதையறிந்த சிவன், தாழம்பூவிடம், ‘இனி உன்னை பூஜைக்கு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். தாழம்பூவிற்கும், பிரம்மனுக்கு தனிக்கோயில்கள் இருக்காது’ என்று சாபம் கொடுத்தார். வராக அவதாரம் எடுத்துச்சென்று சிவனின் பாதத்தை தேடிச்சென்ற விஷ்ணு திரும்பி வந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

அப்படி மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து துவாரம் போட்ட இடத்தில்தான் இந்த கோயில் அமைந்திருக்கிறது. எனவேதான், இந்தத் திருத்தலத்தின் பெயர், ‘ஹரித்துவார மங்கலம்’ என்றானது. ஹரி என்றால் விஷ்ணு, துவாரம் என்றால் துளை, மங்கலம் என்பது ஊரின் பெயர். இதுவே நாளடைவில் ஹரித்துவாரமங்கலம் என்றானது.

இக்கோயிலில் விஷ்ணு போட்ட துளை இன்றும் கருவறையில் உள்ளது. இத்தலத்தில் உள்ள லிங்கம் பாதாளம் வரை நீண்டுள்ளதால், இவரை பாதாளேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இங்கே இறைவன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அலங்காரவள்ளி என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இதிகாசங்களில் பயன்படுத்திய அதிசயப் பொருட்களைப் பற்றி அறிவோமா?
Paathaleswarar temple

ஹரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் வடக்கே உள்ள ஹரித்துவாரை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற இத்தலம், பஞ்சாரண்ய க்ஷேத்ரத்தில் ஒன்றாக உள்ளது. கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிற்பம் இன்றும் இங்கு வழிபாட்டில் உள்ளது என்பது இக்கோயிலின் பழைமையை காட்டுகிறது. 64 வகை தோஷங்களையும் பாதாளேஸ்வரர் நிவர்த்தி செய்வதாகச் சொல்லப்படுகிறது.

இங்கு ஈசனே நவக்கிரகத்திற்கு அதிபதியாக உள்ளதால் இவரை தரிசித்தாலே அனைத்து நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும். இங்குள்ள சப்த கணபதிகளை மாணவர்கள் தரிசித்தால், ஞானம் உண்டாகும். பாதாளேஸ்வரரை வணங்கினால் தீராதக் கடன் பிரச்னைகளும் தீரும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். எனவே, இக்கோயிலுக்கு சென்று தரிசித்துவிட்டு வருவது மிகவும் விசேஷமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com