உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார கோயில் எங்குள்ளது தெரியுமா?

Agatheeswarar Temple Gopuram
Ettiyathali Agatheeswarar Temple.Image Credits: A Wandering Heritager
Published on

திருநள்ளாறு சனி பகவான் திருக்கோயில் எல்லாவிதமான சனி தோஷங்களையும் போக்கும் பரிகாரத் தலமாக இருந்தாலும், அஷ்டம சனி தோஷத்துக்கென்று விசேஷ பரிகாரத் தலமாக விளங்குவது, புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகில் அமைந்துள்ள எட்டியத்தளி அகதீஸ்வரர் திருக்கோயிலாகும்.

மேலும், ஜாதகத்தை இக்கோயில் நவக்கிரகத்தின் அருகில் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இந்த ஒரு ஆலயத்தில் மட்டும்தான் உள்ளது. அகத்தியரால் பூஜிக்கப்பட்ட இந்தத் தலம் சனி தோஷத்திற்கு சக்தி வாய்ந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. களத்திர தோஷம் உள்ளவர்களும் வழிபட வேண்டிய கோயிலாக இது திகழ்கிறது.

ஒரு சமயம் அகத்தியர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தை அடைந்தார். மாலை நேரம் ஆகிவிட்டதால், நித்ய கர்மானுஷ்டங்களை முடிக்க எண்ணினார். அப்போது அங்கே ஒரு குளமும், சுயம்பு லிங்கமும் இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து இரவு அங்கேயே தங்கி விட்டார். அச்சமயம் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் ராமேஸ்வரம் சென்று நீராடி விட்டு திருநள்ளாறு செல்வதற்காக அவ்வழியாக வந்தான். அப்போது அவன் அகத்திய மாமுனிவரை சந்தித்தான்.

மன்னரிடம், அவனது அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்பி தான் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார் அகத்தியர். அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றான். அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் பெற்றனர்.

இத்தலத்தில் சனி பகவான் சிறப்பு சக்திகளுடன் அருள்பாலிக்கிறார். கருவறையில் உள்ள இறைவன் ஈசான்யத்தை பார்ப்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மற்ற ஆலயங்களில் சனி பகவானுக்கு இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் அமைந்திருப்பார்கள். ஆனால், இங்கு வலப்பக்கத்தில் ராகு பகவானும், இடப்பக்கத்தில் கேது பகவானும் அருள்புரிகிறார்கள். ராகு பகவானின் பார்வை சனி பகவான் மீது படுவது மிகவும் சிறப்பாகும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, ‘கல்யாண தட்சிணாமூர்த்தி’ என்றே அழைக்கிறார்கள். அதாவது, திருமணம் தடைபடுபவர்கள் இவரை வழிபட, கூடிய சீக்கிரத்தில் திருமணம் நிகழும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
12 ராசிக்கும் 12 குபேரர்கள் இருக்கும் கோவில் எது தெரியுமா?
Agatheeswarar Temple Gopuram

பல ஆண்டுகளாக இக்கோயில் வழிபாட்டில் இருந்து வந்த அன்னை அகிலாண்டேஸ்வரி விக்ரஹத்தின் ஒரு கரம் சேதம் அடைந்ததால் அதற்கு பதில் புதிதாக ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ய கோயிலுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அப்போது சில அமங்கலமான நிகழ்வுகள் ஏற்பட்டதால் பழைய விக்ரஹத்தை அப்புறப்படுத்தாமல் இரண்டு அம்பாள் விக்ரஹத்திற்கும் பூஜை செய்ய ஆரம்பித்தனர். பொதுவாக, இரண்டு அம்பாள் இருக்கும் கோயில் களத்திர தோஷ பரிகாரத் தலமாக விளங்கும். அந்த வகையில் இக்கோயிலும் களத்திர தோஷத்திற்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும், அம்மனின் பார்வை நவக்கிரகங்களின் மீது படுவது போல அமைந்திருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பைக் கூட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com