பொதுவாக, சிவலிங்கம் ஒரே நிறத்தில்தான் காட்சி அளிப்பது வழக்கம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் ஐந்து விதமான நிறங்களில் காட்சியளிக்கிறது.
இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.
மேலும், இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி தன்னுடைய தோஷம் நீங்கப் பெற்றார் குந்தி தேவி என்கிறது புராணம். மக நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தேவியின் தோஷம் நீங்கப் பெற்ற தலம் இது என்பதால் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து நீராடி வழிபாடு செய்தால் அவர்கள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். இந்தக் குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பு அம்சமும் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை மிகவும் சிறப்பானது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டாலும் இதை அவர்களால் பார்க்க முடியாது.
மேலும், இந்தத் திருத்தலத்தில்தான் இறைவன் அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்து அருள் செய்தார். அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலவரின் பின்புறத்தில் காணலாம். அத்துடன் திருநாவுக்கரசருக்கு ஈசன் பாத தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தக் கோயிலில் பெருமாள் கோயில்களைப் போலவே சடாரி சாத்தும் வழக்கம் உள்ளது. அமர்நீதி நாயனாரை இந்தத் தலத்தில்தான் ஈசன் ஆட்கொண்டார் என்கிறது புராணம்.