Mehandipur Balaji temple
Mehandipur Balaji templeImage Credits: Holidify

தீய சக்திகளை விரட்டும் அனுமன் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

Published on

ராஜஸ்தான் மாநிலம், மெஹந்திபூர் என்ற இடத்தில் உள்ளது பாலாஜி கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் அனுமனை தரிசித்தால் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும், பில்லி சூன்யமும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பல ஆண்டுகளாக பில்லி சூன்யம், பேய் ஓட்டும் சடங்கு, மந்திரங்கள் ஆகியவற்றை சரிசெய்வதற்கான மிகவும் பிரபலமான கோயிலாக இது அறியப்பட்டு வருகிறது. வித்தியாசமான இக்கோயில் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இக்கோயிலில் அருளும் அனுமனை ‘பாலாஜி’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். சீதா தேவி அனுமனுக்கு அளித்த ஆசிர்வாதத்தின்படி, கலியுகத்தில் அனுமன் இருப்பதாகவும், இந்த சகாப்தத்தின் உயிருள்ள கடவுளாகவும் அனுமன் விளங்குகிறார். இந்தக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூறும் குறைகளை அனுமன் கேட்கிறார் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது.

இந்த ஆலயத்தில் முக்கியமான மூன்று சிலைகள் உள்ளன. அவை பாலாஜி மகாராஜா மற்றும் அவரின் உதவியாளர்கள் ஸ்ரீ பிரேத்தராஜ் சர்க்கார், ஸ்ரீ பைரவ தேவ் ஆகியோராவார்கள். முதலில் அனைவரும் பிரேத்தராஜ் ராஜாவை தரிசனம் செய்துவிட்டு பாலாஜியை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக பைரவ பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இங்கு உள்ளது.

பாலாஜி சிலையின் மார்பில் ஒரு சிறிய துளை உள்ளது. அதிலிருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது அனுமனின் வியர்வை என்று பக்தர்களால் இன்றும் நம்பப்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள பாலாஜியின் சிலை சுயம்புவாக உருவானது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீரமங்கை வெட்டுடையார் காளியான வரலாறு தெரியுமா?
Mehandipur Balaji temple

இக்கோயிலில் உள்ள சக்தியால் உடல் வலி குணமாகும் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து சென்றால் பில்லி, சூன்யத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் கூட நம்பத் தொடங்கும் அளவிற்கு எண்ணற்ற பேய் பிடித்த நபர்களையும், பில்லி சூன்யத்தால் பாதிக்கப்படவர்களையும் குணப்படுத்த இங்கு கூட்டி வரப்படுகிறது.

மற்ற கோயில்களைக் காட்டிலும், இங்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் வித்தியாசமாக இருக்கும். இக்கோயிலில் யாரையும் தொட்டுப் பேசவோ அல்லது உணவு உண்ணவோ கூடாது. அப்படிச் செய்தால் நாமும் பாதிப்புக்குள்ளாக வேண்டி வரலாம் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு திரும்பிப் பார்க்கக் கூடாது. கண்டிப்பாக, இக்கோயிலுக்கு பலவீனமான இதயம் கொண்டவர்கள் வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com