
மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அழகான கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்தணராகப் பிறந்தாலும் போர் பயிற்சியில் வல்லவராகவும், க்ஷத்திரியனாகவும் வாழ்ந்தவர் இவர். செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக துரியோதனனின் பக்கத்தில் நின்று தர்மத்தையே எதிர்த்துப் போர் புரிந்தவர்.
ஏகலைவன் என்ற திறமைசாலியான இளைஞன் பிறப்பின் காரணமாக துரோணரிடம் வில்வித்தை கற்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதால் தொலைவில் இருந்தே கவனித்து அர்ஜுனனை விட திறமைசாலியானான். துரோணரின் உருவத்தை சிலையாய் வடித்து குரு வணக்கம் செய்து பயிற்சியை தொடர்ந்து செய்து வில்வித்தையில் திறமைசாலியானான். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் துரோணருக்கு 1872ம் ஆண்டில் ஹரியானா மாநிலம், குரு கிராமத்தில் (குர்கான்) கோயில் கட்டினார் சிங்கபரதன்.
துரோணரின் மனைவி சீத்தலா தேவியின் தீவிர பக்தரான சிங்கபரதன் அவரைத் தனது தாயாகக் கருத்தியவர். சீத்தலா தேவிக்கு இங்கு ஏற்கெனவே கோயில் உள்ளது. எனவே, துரோணாச்சாரியாருக்கும் கோயில் கட்ட எண்ணி நில தானம் செய்தார். சிறியதாகக் கோயில் கட்டப்பட்டு அதில் துரோணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயிலுக்கு அருகில் வசிக்கும் ஐந்து குடும்பங்களால் தற்போது அக்கோயில் பராமரிக்கப்படுகிறது. துரோணாச்சாரியார் கோயில் இந்த மாநில மக்களிடம் பிரபலமாகவில்லை. எனவே, அரசு நடவடிக்கை எடுத்து குர்கான் என்ற பெயரை 'குருகிராம்' என்று மாற்றியது.
துரோணாச்சாரியார் பரத்வாஜ முனிவரின் புதல்வர். அனைத்து கலைகளிலும் வல்லவராகவும் குறிப்பாக வில்வித்தை, வேல், வாள் போன்ற ஆயுதப் பயிற்சிகளில் சிறந்தவராக அறியப்பட்டவர். குருகிராமில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பிற முக்கிய இடங்களுக்கு அருகில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. துரோணர் நீராடிய இடம் குருகிராம் பீமகுண்ட், ஏகலைவன் கோயில் மற்றும் பாண்டவர்களால் கட்டப்பட்ட சிவன் கோயிலும் இங்குள்ளது.
மகாபாரதத்தின்படி குருகிராம் என்பது குரு துரோணாச்சாரியார் வாழ்ந்த இடம். இங்குதான் அவர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் வித்தைகளை கற்பித்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு அறைகளைக் கொண்ட இந்த கோயிலின் நடுவில் துரோணரின் உயரமான சிலையும், அதைச் சுற்றி மற்ற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. பின்புறச் சுவரில் துரோணாச்சாரியார் தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை போன்ற ஓவியங்கள் உள்ளன.
டில்லியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் குருகிராம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் சீத்தல மாதா கோயில் பெரிய அளவில் அழகாக உள்ளது. ஹரியானா சென்றால் மறக்காமல் இந்தக் கோயில்களுக்கு சென்று வாருங்களேன்.