சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where the Perumal Temple is without Sorgavasal?
Do you know where the Perumal Temple is without Sorgavasal?Picasa
Published on

பொதுவாக, பெருமாள் கோயில்கள் என்றாலே அது சிறிய ஆலயமாக இருந்தால் கூட சொர்க்கவாசல் என்று ஐந்து படிகளாவது இருப்பது வழக்கம். ஆனால், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

இத்தல பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக இங்கு வந்ததாகவும், அதனால் இத்தல பெருமாளை வணங்கினாலே பரமபதம் கிடைத்து விடும் என்ற காரணத்தால்தான் தனியாக சொர்க்கவாசல் இல்லை  என்று சொல்லப்படுகிறது. மேலும், இங்குள்ள உத்தராயண, தட்சணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரம பதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் உள்ளது. அதற்கு ஏதுவாக தை முதல் ஆனி வரை உத்தராயண வாசலும் , ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த மகாலட்சுமியை மணமுடிக்க திருமால் சார்ங்கம் எனும் வில்  ஏந்தி வந்ததால் இத்தல பெருமாளுக்கு சாரங்கபாணி என்ற பெயர் வந்தது என்கிறது தல வரலாறு.  இங்கு திருமால் பள்ளி கொண்டிருக்கும் கோலமான சயனக் கோலத்தில் பல வகைகள் உள்ளன. அதில் சாரங்கபாணி ஆலயத்தில், ‘உத்தான சயனம்’ என்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். ஒரு சமயம் இத்தலம் வந்த திருமழிசையாழ்வார் இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், ‘நடந்து நடந்து கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா பள்ளிகொண்டிருக்கிறாய்’ என்று இறைவனைப் பார்த்து பாடியதாகவும் உடனே இறைவன் சற்றே எழுந்ததாகவும், அதைக் கண்ட ஆழ்வார் மனமகிழ்ந்து, ‘அப்படியே இரு’ என்று வேண்டியதாகவும், சுவாமியும் அவ்வாறே அருளி முழுமையாக பள்ளி கொண்ட கோலத்தில் இல்லாமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதையே, உத்தான சயனம் என்கிறது வரலாறு.

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வேங்கடாசலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 108 திருப்பதிகளில் இவை இரண்டுக்கு அடுத்து ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 7 ஆழ்வார்களால் இத்தலம் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலை சமாளிக்க 10 அசத்தலான வழிகள்!
Do you know where the Perumal Temple is without Sorgavasal?

தன்னுடைய திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள் தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டதாகவும் திருமாலை காணாத தாயார் கலக்கமடைந்து தேடிய பின்னர் தாயார் முன்பு தோன்றிய பெருமாள் அவரை மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பெருமாள் ஒளிந்த  இடமே இத்தலத்தில், ‘பாதாள சீனிவாசன் சன்னிதி’யாக உள்ளது. தாயாருடன் பெருமாள் உள்ளது, ‘மேட்டு சீனிவாசர் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது .

இந்தத் தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால் தாயாரை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கு அருள்பாலிக்கிறார். எனவே, இங்கு தாயாருகே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பின்னே பெருமாளை வணங்க வேண்டும். அதற்கேற்ப  தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே பெருமாள் சன்னிதிக்கு செல்லும் வகையில் கோயில் கட்டமைப்பும் உள்ளது. பொதுவாக, ஆலயம் திறக்கும்போது சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை இக்கோயிலில் பிரதானமாக உள்ள கோமளவல்லி தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com