கரும்பு தின்ற கல் யானை எங்கே இருக்கு தெரியுமா?

Do you know where the stone elephant that ate sugarcane is?
Do you know where the stone elephant that ate sugarcane is?

துரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படை வீரர்கள் புடை சூழ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தான் அபிஷேக பாண்டியன். கோயிலுக்கு மன்னன் வருவதை கண்ட பக்தர்கள் அனைவரும் வழி விட்டு ஒதுங்கினர் ஒருவரை தவிர.

அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. அதற்குள் பணியாளர் ஒருவன், ‘மன்னா, அவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றையும் நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.

தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும் மன்னன் அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான். ஆனால், சித்தர் என்று அடையாளம் காட்டப்பட்டவரிடமிருந்து மன்னனுக்கு பதில் மரியாதை கிடைக்கவில்லை. இருப்பினும், மன்னனே அந்த சித்தரிடம் பேசினான். ‘‘தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கேள்விப்பட்டேன். முதியவரை இளைஞனாகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணை பெண்ணாகவும் மாற்றுகிறீர்களாமே. ஊமையை பேச வைக்கிறீர்கள், குருடர்களை பார்க்க வைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அது உண்மைதானா?’’ என்று கேட்டான்.

“எல்லாம் உண்மையே. எனக்கு எல்லா கலைகளும் தெரியும்” என்றார் அந்த சித்தர்.

இருந்தாலும் மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்களின் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான். “சரி சித்தரே, உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது ஒன்றை செய்து காண்பிக்க முடியுமா?” என்றான்.

மன்னன் தன்னையே சோதிக்க நினைப்பதை எண்ணிய சித்தருக்கு கோபம் வந்தது. “என்ன, என்னையே சோதிக்கிறாயா?” என்றார்.

“ஆமாம். அதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால்தானே உண்மையை உணர முடியும்” என்ற மன்னனிடம், “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார் சித்தர்.

“இந்தக் கல் யானை சிலை கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்” என்று அருகில் இருந்த கல் யானை சிலையை காண்பித்தான் மன்னன். கையில் ஒரு கரும்பையும் எடுத்துக் கொண்டான்.

கல் யானை
கல் யானை

சித்தர் அந்தக் கல் யானை சிலையை கூர்ந்து பார்த்தார். அடுத்த நொடியே அந்த கல் யானை உயிர் பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது. அதைப் பார்த்து எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர்.

மன்னன் அருகில் வந்த அந்த யானை அவன் கையில் இருந்த கரும்பை வாங்கி தின்றது. இன்னொரு முறை அந்த யானையை பார்த்தார் சித்தர்.

உடனே அது அரசன் கழுத்தில் கிடந்த மாலையை தனது துதிக்கையால் பறித்தது. அரசன் திடுக்கிட்டுபோனான்.  மன்னனின் படை வீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர, அவர்களை நோக்கிக் கை காண்பித்தான் மன்னன். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலையானார்கள். அதன் பிறகுதான் அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்குமாறு மன்னன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி வேண்டினான். அவனை மன்னித்து சித்தர், “உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார் சித்தர்.

இதையும் படியுங்கள்:
அஷ்டாம்ச ஆஞ்சனேயரின் அஷ்ட அம்சங்கள் என்ன தெரியுமா?
Do you know where the stone elephant that ate sugarcane is?

மன்னனும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையை கூறி, மழலை செல்வத்தை கேட்டான். சித்தர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்பாலித்தார். அக்கணமே சித்தர் மாயமானார். உயிர் பெற்று வந்த கல் யானை மீண்டும் கற்சிலையாக மாறியது. அதன் பின்னர்தான் சித்தர் வடிவில் வந்தது சொக்கநாத பெருமான் என்பதை உணர்ந்தான் மன்னன். அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே அபிஷேக பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன்தான் விக்ரம பாண்டியன்.

இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த அற்புதத்தின்படி கரும்பு தின்றதாக கூறப்படும் கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com