நடராஜர் என்றதும் எல்லோருக்கும் சிதம்பர நடராஜரே நினைவுக்கு வருவார். ஆனால், உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு நடராஜர் சிலை எங்குள்ளது தெரியுமா? தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரத்தில் உள்ள உமா மகேஸ்வரர் கோயிலில்தான் உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு உலோக நடராஜர் சிலை உள்ளது. இவ்விடத்தை ‘திருநல்லம்’ என்றும் அழைப்பார்கள். இந்த இடம் நீரில் மூழ்கி பிறகு தோண்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. செம்பியன் மகாதேவியே இக்கோயிலை விரிவுப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.
இங்கே சிவபெருமானை உமாமகேஸ்வரராகவும், பார்வதி தேவியை மட்டுவார் குழலம்மையாகவும் வணங்குகிறார்கள். இக்கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தல பெருமானைப் போற்றி பாடியுள்ளனர்.
இக்கோயிலில் உள்ள நடராஜர் சிலை பஞ்சலோகத்தால் ஆனது. அதாவது, ஐந்து உலோகங்கள் சேர்த்து செய்யப்பட்டதாகும். இதுவே, உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான நடராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. ‘தீண்டா திருமேனி’ என்று அழைக்கப்படும் இச்சிலை, சிற்பியால் தொடப்படாத ஒரே சிற்பமாகும்.
ஒருசமயம் அரசன் வரகுணபாண்டியன் தனது அரசவை சிற்பியை அழைத்து ஒரு பெரிய நடராஜர் சிலையை உலோகத்தில் செய்யும்படி ஆணையிட்டார். ஆனால், அந்த சிற்பியால் 3 அடி உயரமுள்ள சிலையையே செய்ய முடிந்தது. அரசனோ, இன்னும் சிறிது கால அவகாசம் தந்து மறுபடியும் சிற்பியிடம் சிலையை செய்ய சொன்னார். ஆனால், இந்த முறையும் சொன்ன நேரத்திற்குள் சிலையை செய்து முடிக்கவில்லையென்றால், சிற்பியின் தலையை துண்டித்து விடுவதாக எச்சரித்து அனுப்பினார். அதனால் சிவபெருமானிடம் சிற்பி உதவி கேட்டு வேண்டினார். பிறகு மிகுந்த பதற்றத்துடன் சிலையை செய்து கொண்டிருந்த சிற்பியிடம் சிவனும், பார்வதியும் முதியவர்கள் வேடத்தில் வந்து குடிக்க சிறிது தண்ணீர் வேண்டினர். கோபத்தில் இருந்த சிற்பி, வந்திருப்பது அம்மையப்பன் என்பதை உணராமல் அங்கிருக்கும் உலோகத்தை எடுத்து குடிக்கச் சொல்ல, சிவனும், பார்வதியும் அதை எடுத்து குடித்துவிட்டு உலோக சிலையாக மாறினார்கள்.
இந்த நடராஜர் சிலையின் உயரம் 7அடியாகும். இந்தக் கதையை கேட்ட அரசன் உடனே சிற்பியின் இடத்திற்கு வந்து நடராஜர் சிலையை பார்த்தார். எனினும், நம்பிக்கையில்லாத அரசன், தன்னுடைய வாளை எடுத்து நடராஜர் சிலையின் காலிலே வெட்ட அங்கிருந்து ரத்தம் வழிந்ததாம். இதைப் பார்த்த அரசன் சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார்.
இங்குள்ள நடராஜர் சிலையில் உயிர் உள்ளது போலவே கைரேகை, மச்சம், நகங்கள் இருக்கும் என்பது ஆச்சர்யமான விஷயம். இந்த சிலையை தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போன்றும் அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞன் போலவும் காட்சித் தருகிறது.
இக்கோயிலுக்கு குழந்தை வரம், திருமணம் ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் கூட்டம் வருகிறது. இங்கிருக்கும் சிவனை வேண்டினால் ‘சந்தான பிராப்தி’ கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வைதீஸ்வரரை வேண்டினால் எல்லா நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று இக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.
வருடத்தில் இரண்டு பிரம்மோத்ஸவம் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், திருவாதிரையும் இக்கோயிலில் விமரிசையாகக் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி, பிரதோஷம், விநாயகர் சதூர்த்தி ஆகிய பண்டிகைகளும் இக்கோயிலில் மிகவும் விசேஷம். வருடத்திற்கு ஆறு முறை நடராஜர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.