திருமால் வராக வடிவில் ஈசனை பூஜித்த தலம் எது தெரியுமா?

Do you know which place Mahavishnu worshiped Lord Shiva in Varaha form?
Do you know which place Mahavishnu worshiped Lord Shiva in Varaha form?https://en.wikipedia.org

திருமால் வெள்ளை வராக வடிவிலிருந்து ஈசனை பூஜித்த பெருமைமிக்கதும், குபேரன், ராவணன், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் சிவனை வழிபட்ட திருத்தலம் கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கோயில் ஆகும். குபேரபுரம், பூக்கயிலாயம், சண்பகாரண்யம் என்பவை இந்தத் தலத்தின் வேறு பெயர்கள். இத்தலத்தில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் நடக்காமல் அங்கப்பிரதட்சணம் செய்து, சுவாமியைத் தரிசித்து, பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானை பாடியதாக வரலாறு கூறுகிறது.

ஐந்து நிலைகளை உடைய பழைமையான ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சி தருகிறது. மூலவர் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறைக்கு முன்பு விசாலமான கல் மண்டபம். இறைவனை நோக்கியபடி சூரிய, சந்திரர் திருமேனிகள் உள்ளன. விசாலமான பிராகாரம். கோஷ்ட மூர்த்தமாக நடன விநாயகரும் பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும் அடுத்து லிங்கோற்பவரும், பிரம்மனும் துர்கையும் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு பக்கத்தில் சுவரில் தல வரலாறு சிற்ப வடிவில் காணப்படுகிறது.

இங்குள்ள நடராஜர் திருமேனி மிகவும் அழகானது. இந்த திருவுருவச் சிலைதான் 66 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயிருந்தது. அந்த ஐம்பொன் நடராஜர் சிலை அமெரிக்க நாட்டின் நியூ ஜெர்சி மாகாணத்தின் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு, மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. சிவபுரம் கிராம மக்களும் மற்ற பக்தர்களும் அந்த ஐம்பொன் நடராஜர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து சிவகுருநாதர் கோயிலில் வைத்து, சிறப்பு வழிபாடு செய்து, பிறகு கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயிலில் உள்ள உலோகச் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வேறு ஒரு நடராஜர் திருமேனி சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார்.

இந்த சிவபுரம் கோயிலில் உள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி ஆவார். இந்தத் தலத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது மிகவும் சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்:
நிறம் மாறும் சிவலிங்கம் - பிரமிப்பூட்டும் பஞ்சவர்ணேஸ்வரர்!
Do you know which place Mahavishnu worshiped Lord Shiva in Varaha form?

இக்கோயில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.  முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன், மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பாகும்.

குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவுலகில் தளபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அருள்பெற்றான் என்கிறது புராணம்.  தீபாவளி நாளில் இந்தத் தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சாக்கோட்டை அருகில் உள்ளது சிவபுரம் திருத்தலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com