உண்மையான பக்தர்கள் யார் தெரியுமா?

உண்மையான பக்தர்கள் யார் தெரியுமா?
Published on

ரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில், ‘கிருஷ்ணாவதாரம்’ பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், சலவைத் தொழிலாளி ஒருவனிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்.

அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ஸ்ரீ ராமானுஜரிடம் வந்து “ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ஸ்ரீ ரங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன்” எனக் கூறினான்.

“அப்படியே செய்” எனக் கூறினார் ஸ்ரீ ராமானுஜர்.

அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ஸ்ரீ ரங்கனின் துணிகளை வாங்கிச் சென்று ‘பளிச்’செனத் துவைத்து, ஸ்ரீராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். அதனால் ஸ்ரீ ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டி வந்தார்.

ஒரு நாள் அந்த சலவைத் தொழிலாளி ஸ்ரீராமானுஜரிடம், “நீங்கதான் என்னை பாராட்டறீங்க. ஆனால், ஸ்ரீ ரங்கநாதர் என்னைப் பாராட்டலியே” என்றான்.

அதைக்கேட்டு, ஸ்ரீ ராமானுஜர் அந்த சலவைத் தொழிலாளியை ஸ்ரீ ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, “உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக துணிகளைத் துவைத்துக்கொண்டு வந்து கொடுக்கிறான். ஒரு நாள் அவனிடம் நீங்கள் பேசினால்தான் என்ன?“ எனக் கேட்டார்.

உடனே ஸ்ரீ ரங்நாதன் அந்த சலவைத் தொழிலாளியிடம், “உனக்கு என்ன வேண்டும் கேள்” என்றார்.

அதற்கு அந்த சலவைத் தொழிலாளி, “சாமி, ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலே உங்களுக்குத் துவைத்த துணிகளைத் தர மாட்டேன் என்று சொன்னானே, அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்” என்றான்.

“அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை நான் மறந்தும் விட்டேன்” என்றார் ஸ்ரீரங்கநாதர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீ ராமானுஜர், “ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக அவனுக்கு முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்கலே” என்று அந்த சலவைத் தொழிலாளியிடம் கேட்டார்.

அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, “சாமி, அதை நீங்க பார்த்துக்குவீங்க” என்றான். இதனைக் கேட்ட ஸ்ரீ ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதைத் தம் குருவின் பொறுப்பில் விட்டு விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com