

படைத்தல் கடவுள் பிரம்மா மற்றும் காக்கும் கடவுள் திருமால் ஆகியோருக்கிடையில் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் எனக் கூற, திருமால் வராக அவதாரம் எடுத்து ஈசனின் அடியைக் காண பூமியை குடைந்து சென்று சோர்ந்து போய் திரும்பினார். பிரம்மா அன்னப்பட்சியாக உருவெடுத்து முடியை காண உயரே பறந்து சென்று தயங்கி நின்றபோது.சிவபெருமானின் முடியிலிருந்து கீழே இறங்கி வந்த தாழம்பூவிடம், தான் சிவபெருமானின் முடியைக் கண்டதாக திருமாலிடம் பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி தாழம்பூ பொய் சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான் பொய் சொன்ன பிரம்மனுக்கு பூலோகத்தில் ஆலயம் எதுவும் இருக்காது என்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். சிவபெருமான் தனது அடியையும், முடியையும் காண இயலாது ஜோதி பிழம்பாக நின்ற இடம்தான் திருவண்ணாமலை.
அனல் வடிவாய் எழுந்த சிவன், அடி முடி காணாது தோற்ற அன்னம், வராகம், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ ஆகிய உருவ அமைப்புடன் சிவபெருமான் அடி முடி காணாது காட்சி தருவது ‘லிங்கோத்பவர்’ கோலம் என்று பெயர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் திருக்கார்த்திகையன்று இங்கு தீபம் ஏற்றப்படுகிறது. 'அருணம்' என்றால் சூரியன். நெருப்பின் நிறமான சிவப்பை குறிக்கும். ‘அசலம்' என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே, 'அருணாச்சலம்' என்றால் சிவந்த நிறமுடைய மலை என்று பொருள். இந்த மலையின் உயரம் சுமார் 2 ஆயிரத்து 668 அடி. இந்த மலையை சிவபெருமானின் திருவடியாகவே மக்கள் போற்றி வணங்கி வருகின்றனர். நெருப்பு மலையாக, அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை.
கிரிவலம் செல்லும் கோயில்களில் தமிழ் நாட்டில் முதலிடமாக விளங்குவது திருவண்ணாமலை. ஊழ் வினைகளை நீக்கி, மக்களைப் பாதுகாக்கும் தலமாக விளங்குகின்றது திருவண்ணாமலை தலம். பொதுவாக, பெளர்ணமி நாட்களில் அண்ணாமலையரை தரிசித்து விட்டு கிரிவலம் சென்றால் ஊழ்வினைகள் அகலும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலையை சுற்றி உள்ள 14 கி.மீ. தூரத்தை ஒவ்வொரு நாளும் வலம் வர ஒவ்வொரு பலன் உண்டு. குறிப்பாக, திங்கள்கிழமை கிரிவலம் வர உலகை ஆளும் வல்லமை கிடைக்கும், செவ்வாய்கிழமையன்று கிரிவலம் வர ஏழ்மை நிலை மாறும், புதன்கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் வல்லமை பெறலாம். வியாழக்கிழமை வலம் வர ஞானி ஆகலாம். வெள்ளிக்கிழமை வலம் வர மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும். சனிக்கிழமை அன்று கிரிவலம் வர நவகிரகங்களை வலம் வந்த பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவனின் அனுக்கிரக பலன் கிடைக்கும். பெளர்ணமி நாட்களில் இரவில் திருவண்ணாமலையை கிரிவலம் வருவது நல்ல பலனைத் தரும்.
கார்த்திகை மாத திருக்கார்த்திகை நாளில் அதிகாலையில் கோயிலுக்குள் பரணி தீபம் ஏற்றுவார்கள். அதைப் பார்த்து விட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்து, மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய பிறகு மீண்டும் கிரிவலம் செல்ல, கொடிய பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகையன்று பிரம்மாண்டமான தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். ஐந்து அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த தீபத்தை யார் வேண்டுமானாலும் ஏற்றிவிட முடியாது. இதற்காக சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே மகாதீபத்தை ஏற்றும் உரிமையை பெற்றுள்ளார்கள். இவர்கள்தான் சுமார் 15 தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து மலை மீது மகாதீபம் ஏற்றி வருகிறார்கள்.
இந்த மகாதீபம் தொடர்ந்து பதினொரு நாட்கள் எரியும். அதன் பின்னர் தீபம் எரியும் கொப்பரை கோயிலுக்குக் கொண்டு வரப்படும். அதிலிருக்கும் கரியை சுரண்டி வைத்திருப்பார்கள். அந்தக் கருப்பு மை திருவாதிரை நாளில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.