காகங்கள் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் பார்ப்பது ஏன் தெரியுமா?

Surrender of Kakasuran
Surrender of Kakasuran
Published on

ல்லோரும் காகங்களை அன்றாடம் பார்க்கிறோம். அவை, ஒரு இடத்தில் அமர்ந்து இரையைத் தேடும்பொழுதோ அல்லது உற்று கவனிக்கும் பொழுதோ தலையை ஒரு பக்கமாக சாய்த்துதான் பார்க்கும். அதனால் காகத்திற்கு ஒரு பக்கக் கண் தெரியாது என்று பலரும் நினைக்கிறோம். அப்படி அல்ல. காகங்களுக்கு  இரண்டு கண்களிலும்  பார்வை உண்டு. ஆனால், அவற்றுக்கு நம்மைப் போல் ஒரு பொருளை இரு கண்கள் கொண்டு பார்க்கும் ஆற்றல் கிடையாது. ஒரு கண்ணால்தான் அவற்றால் பார்க்க முடியும். எதனால் அப்படி? இதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.

ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் மூன்று பேரும் வனவாச காலத்தில் இருந்தபொழுது, சித்ரகூடத்தில், சித்தாஸ்ரம பகுதியில் குடிலமைத்துத் தங்கியிருந்தனர். ஒரு நாள்  சீதை, "இன்று என்ன நாள் என்று ஞாபகம் இருக்கிறதா?" என்று ஸ்ரீராமரிடம் கேட்டாள்.

"இல்லையே சீதா… எனக்கு ஞாபகம் இல்லை."

"இன்றுடன் நாம் வனவாசம் வந்து ஏழு வருடங்கள் முடிந்து விட்டன."

"அப்படியா? மனதுக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. பாக்கி ஏழு வருடங்களையும் சுலபமாக நாம் கழித்து விடலாம் இல்லையா? நாம் இருவரும் ஏகாந்தமாய் சற்று நேரம் நதியோரத்தில் அமர்ந்திருக்கலாம் வா" என்றார் ராமபிரான்.

இருவரும் மந்தாகினி நதியின் கரையோரத்திற்கு வந்தனர். ராமர் சீதையின் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டார்.  களைப்பினால் தன்னை அறியாமல் உறங்கியே போனார். அப்பொழுது அங்கு ஒரு காகம் வட்டம் இட்டுக் கொண்டிருந்தது. சீதா பிராட்டியின் அருகே அடிக்கடி வந்து போனது. கைகளால் அந்த காக்கையை விரட்டினாள் சீதை. ஆனால், மீண்டும் மீண்டும் அவள் அருகே வந்த காக்கை, அவள் மார்பை ஒரு முறை கொத்தியது. பிராட்டி விரட்டினாள். மீண்டும் வந்து கொத்தியது. மீண்டும் விரட்டினாள். இரண்டு மூன்று முறைகள் ஆன பொழுது உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீராமர் சற்று நெளிந்தார்.

தன்னால் ராமருக்கு உறக்கம் கெட்டுவிடப் போகிறதே என்று நினைத்த சீதா மாதா, காகம் கொத்தினால் கொத்தட்டும் என்றபடி பேசாமல் இருந்து விட்டாள். தொடர்ந்து காகம் கொத்தியதால் அவள் மார்பில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்துவிட்டது. கசிந்த இரத்தம் உறக்கத்திலிருந்து ராமரின் மேல் விழுந்தது. சட்டென்று ஏதோ ஒரு திரவம் பட்ட நிலையில் ராமர் விழித்துப் பார்த்தபொழுது அந்த காகம் சீதா மாதாவை கொத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. பொறுப்பாரா எம்பெருமான்?

தர்பாசனத்தில் இருந்து ஒரு புல்லை உருவினார். பிரம்மாஸ்திர மந்திரத்தை ஜபித்து அந்தக் காகத்தின் மேல் ஏவினார். பிரம்மாஸ்திரம் காகத்தைத் துரத்தியது. என்ன செய்வதென்று தெரியாமல் காக்கை மூவுலகங்களிலும் சஞ்சாரம் செய்து தனக்கு அடைக்கலம் தேடியது. கடைசியாக இந்திர லோகத்தில் சசி தேவியானவள், நடந்த விபரங்களைக் காக்கையிடம் கேட்டபொழுது, தனது மகனான ஜயந்தனே காக்கை வடிவில் காகாசுரனாக மாறி உலகிற்கு படியளக்கும் லட்சுமி தேவியின் அம்சமான  சீதா பிராட்டிக்கே அபச்சாரம் செய்து விட்டான் என்று அறிந்தபொழுது, துடித்தாள்.

இதையும் படியுங்கள்:
தடுமாறும் பதின் பருவப் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?
Surrender of Kakasuran

"நீ தகாத செயல் செய்ததற்கு மடிவதைத் தவிர வேறு வழியில்லை. பிரம்மாஸ்திரம் என்பது ஏவப்பட்ட பின் இலக்கை எட்டிய பிறகுதான் செலுத்தியவரிடம் வந்து சேரும். செலுத்தியவர் சாதாரண மனிதர் அல்ல. ஸ்ரீ ராமபிரான். மகாவிஷ்ணுவின் அம்சமானவர். அந்த அஸ்திரம் உன்னை தாக்காமல் விடாது. நீ  அவரிடமே சரணடைந்துவிடு" என்றாள். காகாசுரன் படபடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ராமரும் சீதையும் இருக்கும் இடத்தில், ''தாயே என்னை மன்னித்து விடுங்கள். காப்பாற்றுங்கள்” என்று கதறியபடி தரையில் விழுந்தான்.

கீழே விழுந்தபோது தனது காலடிகளை நோக்கி காகாசுரனின் தலை இருப்பதைக் கண்ட சீதை, அத்தலையை ராமனின் திருப்பாதங்களை நோக்கி திருப்பி வைத்து, அவனை மன்னித்து விடும்படி கூறினாள்.

"உன்னை மன்னித்தேன் காகாசுரனே. ஏவிய பிரம்மாஸ்திரத்தை, இட்ட பணியை செய்து முடிக்காமல் திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லை. என்னால் கொடுத்த தண்டனையை வேண்டுமானால் எளிமைப்படுத்த முடியும். அதை வேண்டுமானால் செய்கிறேன்" என்று கூறிவிட்டு, " என்னவளை இரண்டு கண்களாலும் பார்த்துதானே  சித்திரவதை செய்தாய்? இனி இரண்டு கண்களாலும் உன்னால் தீர்க்கமாகப் பார்க்க முடியாது. ஒரு கண் உனக்கு பின்னமாகப் போகட்டும்" என்று கூறினார். அந்த பிரம்மாஸ்திரம் காகாசுரனின் ஒரு கண்ணை சேதப்படுத்தியது. அதனால் ஒரு கண்ணில் பார்வை இருந்தும் இல்லாதது போல் ஆனது.

இந்த காரணத்தினால்தான் காகங்களுக்கு இரண்டு கண்களாலும் ஒரு பொருளை ஒரே சமயத்தில் பார்க்கும் சக்தி கிடையாது. ஒரு கண்ணால் மட்டுமே தீர்க்கமாகப் பார்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com